பாபர் அசாமை பின்னுக்கு தள்ளினார் ரோகித் சர்மா.. ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம்!
2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி உலகக்கோப்பை இரண்டையும் வென்ற இந்திய கேப்டனாக மகுடம் சூடியிருக்கும் ரோகித் சர்மா, டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திலிருந்து ஓய்வை அறிவித்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடிவருகிறார்.
வங்கதேசத்துக்கு இடையேயான ஒருநாள் தொடர் கைவிடப்பட்ட நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடருக்காக காத்திருக்கின்றனர்.
2027 ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லும் கனவோடு இருக்கும் ரோகித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய ஃபார்மை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது ஐசிசியின் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளார்.
பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா..
புதுப்பிக்கப்பட்ட தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டிருக்கும் நிலையில், ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா. ஏற்கனவே இரண்டாவது இடத்திலிருந்து பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதேபோல டி20 பேட்டிங் தரவரிசையில் திலக் வர்மா இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். ஒருநாள் தரவரிசை மற்றும் டி20 தரவரிசையிலும் முதலிடத்தில் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா நீடிக்கின்றனர். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 4வது இடத்தில் நீடிக்கிறார்.
பந்துவீச்சு தரவரிசையில் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியா டெஸ்ட்டில் 4வது இடத்திலும், டி20 மற்றும் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திலும் நீடிக்கிறது.