யுவராஜ் சிங் இருந்தும் தோனி செய்த அந்த செயல்! ரோகித் சர்மா கோட்டைவிட்டது இங்கு தான்!

தொடர் முழுவதும் பலம் வாய்ந்த அணியாக வலம் வந்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக படுதோல்வியை சந்தித்து கோப்பையை கைவிட்டது.
Rohit - Dhoni
Rohit - DhoniICC

2003 இறுதிப்போட்டிக்கான பழிதீர்ப்பு, 2015 அரையிறுதிப்போட்டிக்கான பழிதீர்ப்பு என்றெல்லாம் சொல்லப்பட்ட இந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியானது, இந்திய ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத வண்ணம் ஆஸ்திரேலியாவின் பக்கம் சென்றது இன்னும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்துவருகிறது. தன் நாடு பலவருடங்களாக வாங்கிய அடிக்கு பழிதீர்த்து கோப்பையை ஏந்தும் என்ற நம்பிக்கையோடு திரண்டு வந்த 1.25 லட்சம் மக்களின் கனவானது மைதானத்திலேயே கருகிப்போனது. தொடர் முழுவதும் தொட்டதெல்லாம் தங்கமாக ஜொலித்துவந்த இந்திய அணி சிறுசிறு தவறுகளால் கோப்பை வெல்வதற்கான பெரிய போட்டியில் கோட்டைவிட்டது.

Rohit Sharma
Rohit Sharma

சிறுசிறு கவனச்சிதறல் கூட பெரிய கனவுகளை சிதைத்துவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது 2023 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி. உலகக்கோப்பையின் 10 போட்டிகளில் ஒரு தலைசிறந்த கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா, சிறு கவனச்சிதறல் காரணமாக இறுதிப்போட்டியை விட்டுவிட்டார். இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட கேப்டன் என்றால் அது ரோகித் சர்மா தான், இறுதிப்போட்டியிலும் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால் கடைசிவரை அதை நீட்டிப்பதில் கவனத்தை இழந்துவிட்டார் என்றால் அது பொய்யல்ல.

இந்நிலையில் 2011-ல் ஒரு கேப்டனாக தோனி செய்ததை ஏன் ரோகித் செய்யவில்லை என்ற கேள்வி அதிகமாக எழுந்துள்ளது.

2011-ல் தோனி செய்த அந்த செயல்.. தவறவிட்ட ரோகித்!

இறுதிப்போட்டியில் அஸ்வினை ஏன் எடுக்கவில்லை, ஆல்ரவுண்டர் இல்லாததே தோல்விக்கு காரணம் என்பதையெல்லாம் ஏற்றுக்கொண்டாலும், இந்த ஃபேக்டர்கள் எல்லாம் இல்லாமலயே இந்திய அணி வெற்றியின் பாதையில் தான் இருந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சுப்மன் கில்லை இழந்திருந்தாலும், இந்தியா முதல் 10 ஓவரில் 80 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்டியிருந்தது. ஆனால் அதற்கு பிறகு இந்திய வீரர்களால் 4 பவுண்டரிகளுக்கு மேல் அடிக்க முடியவில்லை, அந்த 4-லும் இரண்டு பவுண்டரிகள் சிராஜ் மற்றும் ஷமியின் பேட்டிலிருந்து வந்தது என்றால் இந்தியாவின் சொதப்பல் ஆட்டத்தை என்ன சொல்வது.

Rohit Sharma
Rohit Sharma

இந்தியா-ஆஸ்திரேலியா என இரண்டு பக்கத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரேயொரு பேட்ஸ்மேனுக்கு மட்டுமே பேட்டிங் இலகுவாக இருந்தது. அது ரோகித் சர்மா ஒருவருக்கு மட்டும் தான். டிராவிஸ் ஹெட் கூட முதலில் சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். 47 ரன்கள் அடித்திருந்த ரோகித் சர்மா 31 பந்துகளை சந்தித்து ஒரு சவாலான பந்துவீச்சுக்கு எதிராக 151 ஸ்டிரைக்ரேட்டில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்படியிருந்த போது அவர் அதிரடிக்கு சென்று அவரே அவருடைய விக்கெட்டை பறிகொடுத்து சென்றிருக்க கூடாது.

Rohit Sharma
Rohit Sharma

கடந்த போட்டிகளை போல் இல்லாமல் அவர் நிலைத்து நின்று ஆடியிருக்க வேண்டும். மாறாக பின்னால் ஸ்ரேயாஸ் ஐயரும், ராகுலும் இருக்கிறார்கள் என்று அலட்சியமாக சென்றிருக்க கூடாது. ஒரு சவாலான பந்துவீச்சு இருக்கும் போது அனுபவம் வாய்ந்தவரும், நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவருமான ரோகித் சர்மா நிலைத்து நின்று போட்டியை முடிந்தவரை எடுத்துச்சென்றிருக்க வேண்டும். இந்த இடத்தில் தான் ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் தோனியில் இருந்து மாறுபட்டு நிற்கிறார்.

2011 dhoni
2011 dhoni

2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் கிட்டத்தட்ட இதே நிலையில் தான் இந்திய அணி இருந்தது. தொடக்கத்திலேயே விரைவாக விக்கெட்டுகளை இழந்த பிறகு பேட்டிங் செய்ய யுவராஜ் சிங் தயாராக இருந்தார். ஆனால் காலிறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் வென்ற ஒருவர் களமிறங்க தயாராக இருந்த போதும், அவரை நிறுத்திவிட்டு வேண்டாம் நான் செல்கிறேன் என பொறுப்பையும், அழுத்தத்தையும் தனதாக்கி கொண்டார் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி. முரளிதரன் என்ற லெஜண்டரி பவுலருக்கு எதிராக ஐபிஎல்லில் ஒன்றாக ஆடியதால், அவருடைய ”தூஸ்ரா” பந்துவீச்சுக்கு எதிராக தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று இருக்கும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் முன்கூட்டியே பேட்டிங்கிற்கு வந்தார் மகேந்திர சிங் தோனி. அப்போது அவர் செய்த அந்த செயலும், சரியான நகர்த்தலும் தான் இந்திய அணியை 28 வருடங்கள் கழித்து கோப்பைக்கு அழைத்துச்சென்றது.

2011 dhoni
2011 dhoni

31 பந்துகளை சந்தித்து ஆஸ்திரேலியா பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பான பேட்டிங் ஆடிய ரோகித் ஷர்மா தோனி செய்ததை செய்யத்தவறிவிட்டார். ஒருவேளை அவர் நிலைத்து நின்று ஒரு ஓவருக்கு ஒரு பவுண்டரி போதும் என ஆடியிருந்தால், ரோகித் மற்றும் கோலி கூட்டணியே இந்திய அணியை 300 ரன்களுக்கு மேல் எடுத்துச்சென்றிருக்கும்.

இதனை சேவாக்கும் விமர்சித்து இருந்தார். “அந்த ஷாட்டால் ரோகித் அதிருப்தி அடைந்து இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அணி நிர்வாகம் நிச்சயமாக அதிருப்தி அடைந்திருக்கும். ஏற்கனவே ஒரு சிக்ஸர், பவுண்டரி கிடைத்துவிட்டது. அந்த ஷாட்டை அடித்திருக்க தேவையில்லை என அவர்கள் கேட்கக்கூடும். ஒருவேளை பவர் பிளேவின் கடைசி ஓவர் என்பதை அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என ரோகித் நினைத்து இருக்கலாம். சந்தேகமே இல்லை அது மோசமான ஷாட் தான். உங்கள் கையில் வாய்ப்பு இருந்தது. அந்த ஷாட் மட்டும் பந்து வெளியே சென்று விழுந்திருந்தால் ஆட்டம் வேறு மாதிரியாக இருந்திருக்கும்” என்று சேவாக கூறியுள்ளார்.

ரோகித் நிலைத்து நிற்காமல் அவுட்டாகி சென்றது, பின்னர் வந்த வீரர்கள் மீது அழுத்தத்தை அதிகமாக்கி பவுண்டரிக்கு செல்லவிடாமல் தடுத்துவிட்டது. ரோகித் சர்மா கோட்டைவிட்டது இங்கு தான்! 2011 இறுதிப் போட்டியில் முதல் 25 பந்துகள் தோனி நிதானமாக விளையாடி குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் தான் அதிரடிக்கு மாறுவார். ஆனால், வழக்கமான மற்ற போட்டிகளை போலவே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துவிடலாம் என ரோகித் நினைத்து அதிரடியில் தொடர்ந்து இறங்கியது அவருக்கே சிக்கலாக மாறிவிட்டது. 75 ரன்களுக்கு மேல் வந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் ரோகித்திற்கு மட்டுமே பந்து நன்றாக சிக்கியது. மற்ற வீரர்கள் யாருக்குமே பந்து சிக்கவே இல்லை. விராட் கோலி, கே.எல்.ராகுல் இருவருமே மிகவும் நிதானமாகவே அரைசதம் அடித்தனர். அதனால், இந்தப் போட்டியில் 2003 ஆம் ஆண்டு ரிக்கி பாண்டிங் செய்ததைப் போல் செய்திருக்க வேண்டும். 140 ரன்கள் விளாசி இருப்பார் ரிக்கி பாண்டிங். அடுத்தடுத்து கில் கிறிஸ்ட், ஹைடன் ஆட்டமிழந்த போது போட்டியை தன்னுடைய தோளில் சுமந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருப்பார்.

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பல போட்டிகளில் சுமாராக பந்துவீசி இருந்தாலும், இறுதிப்போட்டியில் சிறப்பாக பந்துவீசியிருந்தார். ஒரு போட்டியின் தோல்வி ஒருவரை மட்டும் குறை சொல்ல முடியாது. ஆனால், கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அந்த அழுத்தத்தை அவர் கூடுதலாக சுமந்து இன்னும் சிறிது நேரம் களத்தில் இருந்திருந்தால் கதையே வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்பதே பலரது கருத்து.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com