IND vs SA டெஸ்ட் தொடர் : இரண்டு இமாலய சாதனைகளை படைக்கவிருக்கும் ரோகித் சர்மா!

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது நாளை டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்குகிறது.
Rohit Sharma
Rohit Sharmaweb

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 1-1 என தொடரை சமன்செய்தது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என வெற்றிபெற்று தென்னாப்பிரிக்கா மண்ணில் புதுவரலாறு எழுதியது.

இந்நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை 26-ஆம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிக்கான அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா முதலிய ஸ்டார் வீரர்கள் திரும்புவதால் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதேயில்லை என்பதால், ரோகித் சர்மா தலைமயிலான இந்திய அணி மோசமான ரெக்கார்டை முறியடித்து முதல்முறையாக வெற்றியை ருசிக்கும் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது.

இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் அனைவரும் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்த தொடரை இந்திய அணி 2-0 அல்லது 1-0 என வெற்றிபெற அதிகவாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா இரண்டு இமாலய சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா மண்ணில் தொடரை வெல்லும் முதல் இந்திய கேப்டன்!

கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 8 முறை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருமுறை கூட தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதேயில்லை. தோனி தலைமையிலான இந்திய அணி தொடரை சமன்செய்த நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. ஆனால் இந்த முறை இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் சிறப்பான ஃபார்முடன் இருக்கும் வீரர்களோடு சென்றுள்ளது.

Rohit Sharma
Rohit Sharma

ரோகித் மற்றும் விராட் கோலி இருவரும் டாப் ஆர்டரில் சிறப்பான ஃபார்மில் ஜொலிக்கின்றனர். அதேபோல் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் அற்புதமான ஃபார்மில் இருக்கின்றனர். உடன் லோயர் ஆர்டரில் ரவிந்திர ஜடேஜாவும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். பந்துவீச்சை பொறுத்தவரையில் சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் அபாரமான ஃபார்மில் இருக்கின்றனர். உடன் ஷர்துல் மற்றும் முகேஷ் இருவரும் கைகொடுக்க தயாராக இருக்கின்றனர். இந்த நிலைமையில் சென்றால் இந்த முறை தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்தியா வெற்றியை நாட்டுவது நிச்சயம் முடிவான ஒன்றாக இருக்கும்.

Rohit Sharma
Rohit Sharma

ஒருவேளை இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுவிட்டால், தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் கேப்டனாக ரோகித் சர்மா மாறுவார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடிக்கப்போகும் வீரர்!

சிக்சர்கள் மற்றும் ரோகித் சர்மா இரண்டிற்கும் உள்ள காதல் என்பது இந்திய வரலாற்றில் வெற்றிக்காதலாக மட்டுமே இருந்துள்ளது. தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடிய ரோகித் சர்மாவை, விராட் கோலிதான் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பளித்தார். தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதமடித்து விளாசிய ரோகித் சர்மா, தொடர்ந்து அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

Rohit Sharma
Rohit Sharma

இந்நிலையில்தான் தென்னாப்பிரிக்கா தொடரில் ஒரு இமாலய சாதனையை முறியடிக்கும் வாய்ப்புடன் ரோகித் சர்மா களமிறங்கவிருக்கிறார். அதாவது சிக்சருக்கு பெயர்போன ரோகித் சர்மா இன்னும் 13 சிக்சர்களை விளாசினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இந்த பட்டியலில் விரேந்திர சேவாக் 98 சிக்சர்கள் (178 இன்னிங்ஸ்கள்), மகேந்திர சிங் தோனி 78 சிக்சர்கள் (144 இன்னிங்ஸ்கள்) என முதலிரண்டு இடங்களில் உள்ளனர். மூன்றாவது இடத்தில் 77 சிக்சர்களுடன் (88 இன்னிங்ஸ்கள்) இருக்கும் ரோகித் சர்மாவிற்கு இன்னும் 13 சிக்சர்கள் மட்டுமே தேவையாக இருக்கிறது. சிறந்த ஃபார்மில் இருக்கும் ரோகித் இந்த தொடரிலேயே இந்த சாதனையை படைப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com