
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்திருக்கும் இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டொமினிகாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. முதல் இன்னிங்ஸில் கேப்டன் ரோஹித் ஷர்மா 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த சதத்தின் மூலம் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் பத்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 13வது இடத்தில் இருந்த ரோகித், 751 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திற்குத் தாவியுள்ளார். இதன்மூலம் பத்தாவது இடத்தில் இருந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 11வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நடந்த சாலை விபத்திற்கு பின் ரிஷப் பண்ட் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் தரவரிசை பட்டியலைப் பொறுத்தவரையில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷான் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றனர். இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 711 புள்ளிகளுடன் 14வது இடத்தில் இருக்கிறார்.
பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் ரேங்கிங்கில் ரவிச்சந்திரன் அஸ்வின் 884 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இரண்டாவது இடத்திலிருக்கிறார். பத்தாவது இடத்திலிருந்து இந்திய ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜா ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஜஸ்ப்ரித் பும்ரா ஒன்பதாவது இடத்திலிருந்து பத்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா மற்றும் அஷ்வின் இருவரும் முறையே முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றனர். மற்றொரு இந்திய ஆல் ரவுண்டரான அக்ஷர் படேல் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார்.
அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா 121 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அடுத்த இரு இடங்களில் நீடிக்கின்றன.
ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். ஃபகர் ஜமான் (3வது இடம்), இமாம் உல்-ஹக் (4வது இடம்) என 3 பாகிஸ்தான் வீரர்கள் டாப் 5 இடங்களுக்குள் இருக்கின்றனர். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக சுப்மன் கில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். விராட் கோலி எட்டாவது இடத்திலும், கேப்டன் ரோஹித் ஷர்மா பத்தாவது இடத்திலும் இருக்கின்றனர். அயர்லாந்து பேட்ஸ்மேன் ஹேரி டெக்டர் ஆறாவது இடம் பிடித்து அசத்தியிருக்கிறார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஜாஷ் ஹேசில்வுட் 705 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். சமீப காலமாக அசத்தலாக பந்துவீசிவரும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ஸ்பின்னர் குல்தீப் யாதவ் 22வது இடத்தில் இருக்கிறார். ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஷகிப் அல் ஹசன் முதலிடம் பிடித்திருக்கிறார். அந்த பட்டியலில் எந்த இந்திய வீரரும் டாப் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 12வது இடத்தில் இருக்கிறார்.
அணிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. இலங்கை (9வது இடம்) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் (10வது இடம்) அணிகள், வங்கதேசத்துக்கும் (7வது இடம்) ஆப்கானிஸ்தானுக்கும் (8வது இடம்) அடுத்த இடங்களில்தான் இருக்கின்றன.
சர்வதேச டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் 906 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம். மூன்று ஃபார்மட்களுக்கான ரேங்கிங்கிலும் பாபர் அசாம் டாப் 5 இடங்களுக்குள் இருக்கிறார். இந்திய பேட்ஸ்மேன்களில் சூர்யாவுக்கு அடுத்தபடியாக விராட் கோலி 14வது இடத்தில் இருக்கிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் முகமது வசீம் ஆறாவது இடம் பிடித்திருக்கிறார்.
பவுலர்கள் பட்டியலில் 713 புள்ளிகளுடன் ரஷீத் கான் முதலிடத்தில் இருக்கிறார். ஃபசல்ஹக் ஃபரூகி, முஜீப் உர் ரஹ்மான் என 3 ஆப்கானிஸ்தான் வீரர்கள் டாப் 10 இடங்களுக்குள் இருக்கின்றனர். எந்த இந்திய வீரரும் டாப் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. அதிகபட்சமாக ஆர்ஷ்தீப் சிங் 13வது இடத்தில் இருக்கிறார்.
ஆல்ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கிலும் ஷகிப் அல் ஹசன் முதலிடம் வகிக்கிறார். இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார்.
அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அடுத்த இரு இடங்களில் இருக்கின்றன.