விஜய் ஹசாரே| ரோகித் சர்மா டக்அவுட்.. மற்றொரு சதத்தை நோக்கி விராட் கோலி!
விஜய் ஹசாரே கோப்பையில் ரோகித் சர்மா முதல் பந்திலேயே அவுட்டாக, கோலி அதிரடியாக அரைசதம் அடித்தார். கோலி மற்றொரு சதத்தை நோக்கி 74 ரன்களுடன் விளையாடி வருகிறார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் 60 சதங்களுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், கோலி 58 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
இந்தியாவின் முதன்மையான உள்நாட்டு லிஸ்ட்-ஏ கிரிக்கெட் போட்டியான விஜய் ஹசாரே கோப்பையின் 33ஆவது சீசன் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி தொடங்கியது. ஜனவரி 18ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
இந்தத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பங்கேற்றுள்ளனர். டெஸ்ட் மற்றும் டி20 வடிவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஜாம்பவான்கள், ஒருநாள் வடிவத்தில் மட்டும் விளையாடிவருவதால் தங்களுடைய ஃபார்மை தொடரும் வகையில் விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்றுள்ளனர்.
ரோகித் 0 ரன்.. சதத்தை நோக்கி கோலி!
விஜய் ஹசாரே தொடரின் முதல் போட்டியில் ரோகித் சர்மா 94 பந்தில் 155 ரன்களும், விராட் கோலி 101 பந்தில் 131 ரன்களும் அடித்து அசத்தியிருந்தனர். இந்தசூழலில் இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் ரோகித் மற்றும் கோலியை பார்க்க மைதானத்தில் ரசிகர்கள் குவிந்தனர்.
பரபரப்பாக தொடங்கப்பட்ட இன்றைய விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா துரதிருஷ்டவசமாக முதல் பந்திலேயே அவுட்டாகி கோல்டன் டக்கில் வெளியேறினார். மறுமுனையில் குஜராத் அணிக்கு எதிராக டெல்லி அணியில் விளையாடிவரும் விராட் கோலி அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார். 74 ரன்களுடன் பேட்டிங் செய்துவரும் கிங் கோலி, மற்றொரு சதத்தை பதிவுசெய்வார் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருந்துவருகின்றனர்.
உலக லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் முதலிடத்தில் 60 சதங்களுடன் சச்சின் இருந்துவரும் நிலையில், விராட் கோலி 58 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

