11வது சதம்.. சரிந்த அணியை மீட்டு விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ரோகித்! சிக்ஸரிலும் சாதனை!

டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, தன்னுடைய 11வது டெஸ்ட் சதம் அடி
ரோகித் சர்மா
ரோகித் சர்மாட்விட்டர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து அணியும் 2வது போட்டியும் இந்திய அணியும் வெற்றிபெற்றுள்ளன. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இவ்விரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, இன்று (பிப்.15) ராஜ்கோட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த ரோகித் சர்மா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ரோகித் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடங்கியது. கடந்த போட்டியில் இரட்டைச் சதம் கண்டு வெற்றிக்கு வழிவகுத்த ஜெய்ஸ்வால் இந்த முறை 10 ரன்களில் மார்க் வுட் பந்துவீச்சில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அவருக்குப் பின் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரரான சுப்மன் கில், வந்த வேகத்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் நடையைக் கட்டினார். அடுத்து அவருக்குப் பின்னால் களமிறங்கிய ரஜத் படிதாரும் 5 ரன்களில் வெளியேறினார்.

ஒருகட்டத்தில் இந்திய அணி 8.5 ஓவர்களில் 33 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து பரிதவித்தது. அப்போது களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஜடேஜா ரோகித்துடன் கைகோர்த்தார். இந்த இணை மேலும் விக்கெட்டை இழக்காது, பொறுமையாகவும் அதேநேரத்தில் ரன்களைக் குவிக்கும் முயற்சியும் ஈடுபட்டது. அதன் விளைவாக, கடந்த இன்னிங்ஸ்களில் தொடர்ந்து பேட்டிங்கில் மிகவும் சொதப்பி வந்த ரோகித் சர்மா, இன்றைய போட்டியில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் பல்வேறு விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அடிக்கும் 11வது சதம் இதுவாகும். இங்கிலாந்துக்கு எதிராக அவரது 3வது சதம் இதுவாகும். மேலும், இங்கிலாந்துக்கு எதிராக இந்திய தொடக்க வீரர்கள் அடித்த டெஸ்ட் சத பட்டியலில் ரோகித் சர்மா 3 பேருடன் 2வது இடத்தைப் பகிர்ந்துள்ளார். முதல் இடத்தில் சுனில் கவாஸ்கர் 4 சதங்களுடன் உள்ளார். முன்னதாக, டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலிலும் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்தார். இதன்மூலம் 80 சிக்ஸர்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் முதல் வீரேந்திர சேவாக் 90 சிக்ஸர்களுடன் முதல் இடத்திலும், 78 சிக்ஸர்களுடன் தோனி 3வது இடத்திலும் உள்ளனர்.

இன்றைய போட்டியில் ரோகித் சர்மா, 196 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 131 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி தற்போது 74 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்துள்ளது. ரவீந்திர ஜடேஜா 94 ரன்களுடனும், சர்ஃபராஸ் கான் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் சர்வதேச போட்டியில் காலடி எடுத்து வைத்திருக்கும் சர்ஃப்ராஸ் கான் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com