’பொளக்கட்டும் பற பற..’ உலகத்தில் 2-வது கிரிக்கெட் வீரராக வரலாறு படைத்த ரோகித் சர்மா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 12 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் என துவம்சம் செய்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா 119 ரன்கள் குவித்து மிரட்டினார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 32வது சதத்தை பதிவுசெய்த ஹிட்மேன், அவர்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் ஒரு அதிரடி இன்னிங்ஸ் விளையாடி எல்லோரையும் வாயடைக்க வைத்தார்.
இந்நிலையில் போட்டியில் 7 சிக்சர்களை நாலாபுறமும் சிதறடித்த ரோகித் சர்மா, அதிரடி வீரர் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.
ODI கிரிக்கெட்டில் புதிய சாதனை..
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 7 சிக்சர்களை அடித்த ரோகித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் அதிரடி வீரர் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார்.
331 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலிருந்த கிறிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி 338 சிக்சர்களுடன் உலகத்தின் இரண்டாவது வீரராக மாறியுள்ளார். முதலிடத்தில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி 351 சிக்சர்களுடன் நீடிக்கிறார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள்:
1. ஷாஹித் அப்ரிடி - பாகிஸ்தான் - 351 சிக்சர்கள்
2. ரோஹித் சர்மா* - இந்தியா - 338 சிக்சர்கள்
3. கிறிஸ் கெய்ல் - வெஸ்ட் இண்டீஸ் - 331 சிக்சர்கள்
4. சனத் ஜெயசூர்யா - இலங்கை - 270 சிக்சர்கள்
5. எம் எஸ் தோனி - இந்தியா - 229 சிக்சர்கள்
6. இயோன் மோர்கன் - இங்கிலாந்து - 220 சிக்சர்கள்