MI-லிருந்து விலகல்? காம்பீருடன் கைகோர்க்கும் SKY.. ஐபிஎல்லில் ராபின் உத்தப்பா போடும் கணக்கு?
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகி, மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்து கவுதம் கம்பீருடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கணித்துள்ளார்.
இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்தவர் சூர்யகுமார் யாதவ். 2024-ஆம் ஆண்டு டி20 கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பெரும் வெற்றிகளைப் பெற்றது. குறிப்பாக 2025ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை மற்றும் 2026 டி20 உலகக் கோப்பை ஆகியவற்றைப் பெற்றுத் தந்தது. ஆயினும் இந்த வெற்றிகளுக்கு மத்தியில் அவரது பேட்டிங் குறித்து தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளிலும் அவர் தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் திணறினார். சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2026 தொடரில், சூர்யகுமார் யாதவ் 13 இன்னிங்ஸ்களில் 270 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த நிலையில்தான், அவரது ஃபார்ம் மற்றும் இந்திய அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டார். தவிர, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடர்களுக்கான அணிகளிலிருந்தும் அவர் கழற்றிவிடப்பட்டார். அதேநேரத்தில், அவருக்குப் பதிலாக புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகி, மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்து கவுதம் கம்பீருடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கணித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “சூர்யகுமார் யாதவ் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குச் செல்ல வாய்ப்புள்ளது. 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு கவுதம் காம்பீரின் இந்திய அணி பயிற்சியாளர் காலம் முடிவுக்கு வரும். அதன்பின்னர் அவர் மீண்டும் கொல்கத்தா அணியின் ஆலோசகராகவோ அல்லது பயிற்சியாளராகவோ இணைய வாய்ப்புள்ளது. அப்போது சூர்யகுமார் யாதவ் கொல்கத்தா அணியின் கேப்டனாகவும், கம்பீர் ஆலோசகராகவும் புதிய கூட்டணியை அமைப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

