ஏமாற்றிய சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால்.. 90 ரன்கள் அடித்து கரைசேர்த்த கேப்டன் பராக்! 225 ரன்கள் குவித்த RR!
ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 225 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி விரைவில் அவுட்டானாலும், கேப்டன் ரியான் பராக் 50 பந்தில் 90 ரன்கள் குவித்து இன்னிங்ஸை தாங்கினார். இறுதியில் டொனவன் ஃபெரிரா 14 பந்தில் 47 ரன்கள் அடித்து ரன்களை குவித்தார்.
2026 ஐபிஎல் தொடரானது பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. 40 போட்டிகளை கடந்துள்ள நிலையில், டாப் 4 இடத்திற்காக ஒவ்வொரு அணியும் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. அந்தவகையில் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டு விளையாடிவருகிறது.
ஜெய்ப்பூரில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. டெல்லி அணியின் நட்சத்திர பவுலர் மிட்செல் ஸ்டார்க் கம்பேக் கொடுத்த நிலையில், சூர்யவன்ஷி மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் எப்படி ஸ்டார்க்கை எதிர்கொள்ளப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
ஆனால் முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பிய ஜெய்ஸ்வால் ஸ்டார்க்கிற்கு ஷாக் கொடுத்தாலும், 3வது பந்திலேயே அவருடைய விக்கெட்டை வீழ்த்திய ஸ்டார்க் அசத்தினார். மறுமுனையில் இருந்த சூர்யவன்ஷியை ஜேமிசன் 4 ரன்னுக்கு போல்டாக்கி அனுப்ப, ராஜஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் மீது அழுத்தம் அதிகமானது.
பொறுப்பை தனதாக்கி கொண்ட கேப்டன் ரியான் பராக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்தில் 8 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 90 ரன்கள் குவித்து அணியை கரைசேர்த்தார். துருவ் ஜுரெல் 42 ரன்கள் அடித்து வெளியேற, கடைசியாக வந்து நாலாபுறமும் 6 சிக்சர்களை பறக்கவிட்ட டொனவன் ஃபெரிரா வெறும் 14 பந்தில் 47 ரன்களை விளாச 20 ஓவரில் 225 ரன்களை குவித்தது ராஜஸ்தான் அணி.
வெற்றிபெற கட்டாயத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி 226 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடவிருக்கிறது.

