MI vs RCB| மும்பை பவுலர்களை சிதறடித்த ஆர்சிபி.. 240 ரன்கள் குவித்து அபாரம்!
வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மீது ஆர்சிபி அணி அதிரடி ஆட்டம் காட்டி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் குவித்தது. ஃபிலிப் சால்ட் 6 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் பறக்கவிட்டார். விராட் கோலி 50 ரன்கள், ரஜத் பட்டிதார் 20 பந்தில் அரைசதம், டிம் டேவிட் 34 ரன்கள் சேர்த்தனர். மும்பையின் பும்ரா தொடர்ந்து நான்காவது போட்டியிலும் விக்கெட் எடுக்கத் தவறினார்.
மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வுசெய்ய ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஃபிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கே 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர்.
அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஃபிலிப் சால்ட் 6 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் என பறக்கவிட்டு 78 ரன்கள் விளாசினார். மறுபக்கம் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிய விராட் கோலி 50 ரன்கள் அடித்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ரஜத் பட்டிதார் நாலாபுறமும் 5 சிக்சர்களை பறக்கவிட்டு 20 பந்தில் அரைசதமடித்து அசத்தினார்.
கடைசியாக வந்து 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என விளாசிய டிம் டேவிட் 34 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆர்சிபி 240 ரன்களை குவித்தது. தொடர்ந்து 4 போட்டிகளாக மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர பவுலர் பும்ரா விக்கெட் இல்லாமல் சென்றுள்ளார்.

