கணவருக்கு Good Certificate.. ஆனால் இதர வீரர்களுக்கு? - ஜடேஜா மனைவியின் பேச்சால் அணியில் புகைச்சல்!
வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களின்போது சில இந்திய கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு தீய செயல்களில் ஈடுபடுவதாக ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக இருப்பவர் ரவீந்திர ஜடேஜா. இவரின் மனைவி, ரிவாபா ஜடேஜா. இவர், தற்போது குஜராத் அரசில் அமைச்சராக அங்கம் வகிக்கிறார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து அவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், “எனது கணவர் ரவீந்திர ஜடேஜா, கிரிக்கெட் விளையாட லண்டன், துபாய், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. ஆனாலும் இன்றுவரை, அவர் தனது பொறுப்புகளைப் புரிந்துகொண்டதால், எந்தவிதமான தீய செயல்களிலும் ஈடுபட்டதில்லை. அதேநேரத்தில், அணியின் மற்ற அனைவரும் தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள், ஆனால் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து எந்தத் தடையும் இல்லை. நாம் வாழ்க்கையில் முன்னேறியவுடன், அடித்தளமாக இருப்பதும், நமது கலாசார வேர்களை நினைவில் கொள்வதும் முக்கியம்” என அவர் தெரிவித்துள்ளார். அவருடைய கருத்து பேசுபொருளாகி இருக்கிறது.
முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின்போது பீர் பாட்டிலுடன் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து வீரர்கள் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியது. அதேபோல், புகையிலை உள்ளிட்ட போதை விளம்பரங்களில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு வாரியத்தை அறிவுறுத்தியிருந்தது.

