ashwin
ashwinweb

இனி எல்லாம் அவர்தான்.. மீண்டும் CSK உடன் இணைந்த ரவிச்சந்திரன் அஸ்வின்..? தோனிக்கு நிகரான பொறுப்பு!

2015 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனும், 2016 வரை இந்தியா சிமெண்ட்ஸ் உடனும் இணைந்திருந்த ரவிச்சந்திரன், தற்போது மீண்டும் சிஎஸ்கே அணியின் வளர்ச்சியில் முக்கிய அங்கம் வகிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு இளம் வீரராக தொடங்கிய ரவிச்சந்திரன் அஸ்வினின் கிரிக்கெட் பயணம், தற்போது அதே நிர்வாகத்துடன் முடிவடையும் வகையில் மாறியுள்ளது தான் ஒரு மேஜிக் தருணமாக மாறியுள்ளது.

2008-ம் ஆண்டு முதல் இந்தியா சிமெண்ட்ஸ் உடன் தொடங்கிய ரவிச்சந்திரன் அஸ்வினின் கிரிக்கெட் பயணம், 2009-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமானதில் உச்சம் தொட்டது. அறிமுக போட்டியில் அஸ்வினுக்கு பந்துவீசும் வாய்ப்பையே கேப்டன் தோனி வழங்கவில்லை, ஆனால் பின்னர் கிடைத்த வாய்ப்பை தனதாக்கி கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின் “நீ தான் சிஎஸ்கே அணியின் மெயின் பவுலர்” என தோனியே சொல்லுமளவு தன்னுடைய பந்துவீச்சு திறமையால் கவனம் ஈர்த்தார்.

அஸ்வின்
அஸ்வின்

அதற்குபின்னர் 2010-ல் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 இடத்திற்கான கதவு தானாகவே திறந்தது. பின்னர் 2011-ல் டெஸ்ட் அறிமுகம் பெற்று இந்தியாவின் முழுநேர கிரிக்கெட்டராக ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னை உயர்த்திக்கொண்டார். ஆனால் இது எல்லாவற்றிற்கும் விதைப்போட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் தான்.

சிஎஸ்கே அணியுன் 2008 முதல் 2015 வரை இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், தோனி தலைமையில் சென்னை அணியை 2010 மற்றும் 2011 இரண்டு வருடங்களில் தொடர்ச்சியாக கோப்பைக்கு அழைத்துச்சென்றார். சென்னை அணியிலிருந்து வெளியேறினாலும் 2016 வரை இந்தியா சிமெண்ட்ஸ் உடன் இணைந்திருந்தார் ரவிச்சந்திரன்.

இந்நிலையில் எங்கிருந்து அவருடைய பயணம் தொடங்கியதோ, மீண்டும் அதே இடத்திலிருந்து புதிய பயணம் ஒன்றை தொடங்கவிருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

சிஎஸ்கே அணியுடன் இணைந்த ரவிச்சந்திரன் அஸ்வின்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உயர் செயல்திறன் மையம் (High-Performance Centre) சென்னையின் புறநகரில் அமைந்துள்ளது. அந்த மையத்தின் பொறுப்பு மற்றும் சூப்பர் கிங்ஸின் அகாடமிகளை வழிநடத்தும் முக்கியமான பொறுப்பில் அஸ்வின் அங்கம் வகிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஸ்வின்
அஸ்வின்

ஸ்போர்ட் ஸ்டார் வெளியிட்டிருக்கும் தகவலின் படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்திறன் மையத்தின் தலைமை பொறுப்பு அஸ்வினுக்கு வழங்கப்படுகிறது. அதில் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் இருந்து பங்கேற்கும் அனைத்து வீரர்களின் பயிற்சிகளுக்கும் ஆலோசனை வழங்குவது, என்ன மாதிரியான பயிற்சிகள் வழங்க வேண்டும் என முடிவு செய்யும் பொறுப்பு அனைத்தும் அஸ்வின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

அஸ்வின்
அஸ்வின்

அதுமட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி அமர்வுகள், TNCA-ன் முதல் பிரிவு போட்டிகளும் அங்கு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. செய்திறன் மையத்தின் மைதானம் தற்போது தயாராக உள்ளதாகவும், பிற உள்கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் 2025 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக மையம் முழுவதுமாக செயல்பட தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அஸ்வின், காசி விஸ்வநாதன் சொன்னது என்ன?

இதுகுறித்து அஸ்வின் பேசுகையில், “விளையாட்டை வளர்ப்பது மற்றும் கிரிக்கெட் சகோதரத்துவத்திற்கு பங்களிப்பது எனது முதன்மையான கவனம். இது எல்லாம் என்னுடைய கிரிக்கெட் பயணம் தொடங்கிய அதே இடத்திற்குத் திரும்பியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

காசி விஸ்வநாதன்
காசி விஸ்வநாதன்

காசி விஸ்வநாதன் கூறுகையில், “அஷ்வின் மீண்டும் வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சூப்பர்கிங்ஸ் அணியின் வளர்ச்சி மற்றும் எங்கள் உயர் செயல்திறன் மையத்தில் அவர் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கவிருக்கிறார். தமிழ்நாட்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும், தலைசிறந்த இந்திய ஸ்பின்னராகவும் அறியப்பட்டவர். இந்தியா, தமிழ்நாடு மற்றும் கிளப் என எந்த வடிவ விளையாட்டாலும் அவருடைய அர்ப்பணிப்பு எப்படிப்பட்டது என்று எல்லோரும் அறிந்ததே. மையத்தை வழிநடத்தவும், வரும் இளம் திறமைகளை வளர்க்கவும் அவர் சிறந்த நபராக இருப்பார்” என்று விஸ்வநாதன் கூறியுள்ளதாக ஸ்போர்ட் ஸ்டார் மேற்கோள் காட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com