ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வின் சேர்ப்பு! முதல் 2 போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் கேப்டன்!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
அஸ்வின் - கேஎல் ராகுல்
அஸ்வின் - கேஎல் ராகுல்Twitter

2023 ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக கோப்பையை கைப்பற்றியிருக்கும் இந்திய அணி, அடுத்து எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பைக்காக ஆயத்தமாகி வருகிறது. ஆசியக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்தால் கடைசி நேரத்தில் அக்சர் பட்டேல் அணியிலிருந்து வெளியேறியிருக்கும் நிலையில், அவருடைய இடத்தில் ஒரு அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர் மற்றும் பேட்டர் வரவேண்டும் என்ற குரல் எழுந்தது. வாசிங்டன் சுந்தர் இடது கை வீரராக இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம் தான் என்றாலும், அனுபவம் வாய்ந்த அஸ்வினை அக்சர் படேல் இடத்தில் ஆடவைக்க வேண்டும் என்ற கருத்தும் அதிகமாகவே இருந்து வந்தது.

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் அஸ்வினும் இருக்கிறார்!- ரோகித் சர்மா

அக்சர் பட்டேல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இடம்பெற மாட்டார் என இந்திய அணி நிர்வாகம் கூறியதை அடுத்து, அவர் இடத்தில் யார் விளையாட போகிறது என்ற கேள்வி கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்கப்பட்டது.

Rohit Sharma - Ajit Agarkar
Rohit Sharma - Ajit AgarkarTwitter

ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய ரோகித் சர்மா, “ஒரு சுழற்பந்து வீச்சாளர் ஆல்-ரவுண்டராகவும் இருப்பவர்கள் வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வினும் இருக்கிறார். அவருடன் தினமும் போனில் பேசி வருகிறேன். ஆசியக்கோப்பை தொடரின் கடைசி நிமிடத்தில் அக்சருக்கு காயம் ஏற்பட்டது. வாஷிங்டன் தயாராக இருந்ததால் அவரை இந்திய அணிக்குள் எடுத்துவந்தோம்” என்று அஸ்வினின் வாய்ப்பு குறித்து கூறியிருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வின் கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அதற்கேற்றார் போலவே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு பிறகு அஸ்வின்! கேப்டனாகும் கேஎல் ராகுல்!

ஆஸ்திரேலியா தொடருக்கான ஒருநாள் அணியை அறிவித்திருக்கும் பிசிசிஐ, தங்களுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வீரர்களின் பெயரை வெளியிட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய அஸ்வின், கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கு பிறகு அணிக்குள் திரும்பியுள்ளார். ருதுராஜ் மற்றும் திலக் வர்மா இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதலிரண்டு போட்டிகளுக்கு ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் முதலிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலிரண்டு போட்டிகளுக்கு கேப்டனாக கேஎல் ராகுலும், துணைக்கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டிருப்பது உடற்தகுதிக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ind vs Aus
Ind vs Aus

முதல் இரண்டு ODI-க்கான அணி:

கே.எல்.ராகுல் ( கேப்டன்+ விக்.கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ஆர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

ind vs aus
ind vs aus

கடைசி மற்றும் 3வது ODI-க்கான அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல்*, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஆர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com