"இது எனக்கு ஒரு பெரிய சந்தர்ப்பம். ஆனால்.." - 100வது டெஸ்டில் களமிறங்கும் அஸ்வின் நெகிழ்ச்சி!

இமாச்சல் பிரதேசம் தர்மசாலாவில் நடைபெற இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு 100வது டெஸ்டாக அமைய உள்ளது.
அஸ்வின்
அஸ்வின்ட்விட்டர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியைத் (இங்கிலாந்து வெற்றி) தவிர்த்து, அடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரையும் வென்று சாதனை படைத்தது. இவ்விரு அணிகளுக்கான கடைசி டெஸ்ட் போட்டி, நாளை (மார்ச் 7) இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியானது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ஆகியோருக்கு 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின், “இந்த 100வது டெஸ்ட் போட்டி எனக்கு மிகவும் முக்கியமானது. என்னைவிட எனது பெற்றோர்கள் மற்றும் மனைவி, குழந்தைகளுக்கு மிகமிக முக்கியமானது. இது எனக்கு ஒரு பெரிய சந்தர்ப்பம். ஆனால் இதில் இலக்கைவிட பயணம்தான் சிறப்பு வாய்ந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில் மாபெரும் மைல்கல் சாதனையையும் படைக்க இருக்கிறார் அஸ்வின். அதாவது, 100 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய 2வது பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைப்பார். வீழ்த்தாவிட்டாலும் 507 விக்கெட்களுடன் சாதனையைத் தொடர்வார். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தனது 100வது டெஸ்ட் போட்டியில் ஆடிய போது 584 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவருக்கு அடுத்து அஸ்வின் 507 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

5வது போட்டியில் அவர் விக்கெட் எடுப்பதைப் பொறுத்து இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் அனில் கும்ப்ளே இருக்கிறார். அவர் 478 விக்கெட் வீழ்த்தி உள்ளார். நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் கிளென் மெக்கிராத் (446 விக்கெட்கள்) மற்றும் ஷேன் வார்னே (436 விக்கெட்கள்) உள்ளனர். இதைத் தவிர, தமிழ்நாட்டிலிருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைக்க இருக்கிறார். 100வது டெஸ்ட் போட்டியில் ஆடும் உலகின் 76வது வீரர் அஸ்வின் ஆவார். இந்திய அளவில் 14வது இடம்பிடிக்க இருக்கிறார். இந்திய பந்துவீச்சாளர்களில் ஐந்தாவது இடத்தைப் பிடிப்பார்.

37 வயதான அஸ்வின், சமீபத்தில் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், அனில் கும்ப்ளே, கிளென் மெக்ராத், கர்ட்னி வால்ஷ் மற்றும் நாதன் லயன் போன்ற ஜாம்பவான்களைத் தொடர்ந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது பந்துவீச்சாளராக அஸ்வின் சாதனைப் பட்டியலில் இணைந்தார்.

கடந்த 2011ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அஸ்வின், இதுவரை 99 போட்டிகளில் விளையாடி 507 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அதேவேளையில் பேட்டிங்கில் 3,309 ரன்களையும் குவித்துள்ளார். இதில் 5 சதங்கள், 14 அரைசதங்கள் அடங்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com