”கோலியை நேரடியாக டெஸ்ட் கேப்டனாக்கி இருப்பேன்; அவர் அப்படி செய்திருக்க கூடாது” - ரவி சாஸ்திரி வேதனை!
2025-ம் ஆண்டானது ‘விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு, ரோகித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வு, ஸ்டீவ் ஸ்மித்தின் ஒருநாள் கிரிக்கெட் ஓய்வு, நிக்கோலஸ் பூரன், கிளாசனின் சர்வதேச கிரிக்கெட் ஓய்வு’ என பல இதயம் உடைக்கும் தருணங்களை கொடுத்துவிட்டது.
இதில் விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு என்பதுதான் ‘ஒரு வீரரே விரும்பாத போதும், சூழ்நிலையால் அல்லது அழுத்தத்தால் அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் விடுக்கப்பட்ட ஓய்வு அறிவிப்பாக’ ரசிகர்களின் மனதை ரணமாக்கியுள்ளது.
ஐபிஎல் கோப்பை வென்ற பிறகு கூட பேசிய கோலி, ‘ஐபிஎல் கோப்பையை வென்றது என் வாழ்வின் சிறந்த தருணமாக பார்க்கிறேன். ஆனால் நான் இன்னும் இதை டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு 5 புள்ளிகள் குறைவாகவே மதிப்பிடுவேன், அந்தளவு நான் டெஸ்ட் கிரிக்கெட்டை மதிக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.
விராட் கோலியின் இந்த கூற்று அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை இன்னும் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை காட்டுகிறது என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியிருந்தார்.
இவற்றையெல்லாம் கடந்து சமகால கிரிக்கெட்டின் ஃபேப் 4 கிரிக்கெட்டர்களாக பார்க்கப்படும் ‘விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட்’ முதலிய வீரர்களில், மற்ற 3 வீரர்கள் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிவரும் சூழலில், விராட் கோலி மட்டும் ஓய்வை அறிவித்திருப்பது டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கும் ஒவ்வொரு இந்திய ரசிகருக்கும் பொறுத்துக்கொள்ள முடியாத வேதனையாகவே இருக்கிறது.
அதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடக்க 770 ரன்களே மீதமிருக்கும் நிலையில், அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த பட்டியலில் சுனில் கவாஸ்கருக்கு கீழ் முடித்ததெல்லாம் விராட் கோலியின் தீவிர ரசிகர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஸ்டேட்ஸாகவே பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 10,000 டெஸ்ட் ரன்கள், சச்சினுக்கு பிறகான அதிக டெஸ்ட் சதங்களோடு விராட் கோலி முடித்திருக்க வேண்டும் என்பதே பலரின் தீராத ஆசையாக இருக்கிறது.
இந்நிலையில் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும், ஒரு விராட் கோலியின் ரசிகராக மாறி இதே வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
நான் கோலியை டெஸ்ட் கேப்டனாக அறிவித்திருப்பேன்..
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தையே மாற்றிய ஒரு வீரர் என்பதை தாண்டி, உலக டெஸ்ட் கிரிக்கெட்டை ஒரு தூதராக இருந்து எப்படி மாற்றினார் என்பதே விராட் கோலியை டெஸ்ட் கிரிக்கெட்டில் கொண்டாடித்தீர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானம், ஆஸ்திரேலியாவின் அடிலய்டு மைதானங்களில் விளையாடிய விராட் கோலியின் ஆட்டம் காலத்திற்கும் அழியாதவை.
3 வடிவ கிரிக்கெட்டிலும் 50 சராசரி வைத்திருந்த வீரராக விளங்கிய விராட் கோலி, இப்படியான முறையில் அவரின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் ஓய்வை அறிவித்திருக்க கூடாது என்பதே எல்லோருடைய ஆதங்கமாகவும் இருந்துவருகிறது.
இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கும் ரவி சாஸ்திரி, “விராட் கோலி திடீரென்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இதை அவர் இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம், ஒருவேளை கூடுதல் தகவல்தொடர்பு இருந்திருந்தால், நான் அதில் ஒரு நபராக தொடர்பில் இருந்திருந்தால், ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு கோலியை நேரடியாக கேப்டனாக நியமித்திருப்பேன்.
ஏனென்றால் அவர் ஒரு சிறந்த வீரர். தலைசிறந்த வீரர். உங்கள் நம்பர்கள் உங்களை பற்றிய உண்மையை அப்படியே சொல்லிவிடாது, நீங்கள் விளையாடும்போதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதை மக்கள் உண்மையிலேயே உணர்வார்கள். மாறக்கூடிய புள்ளிவிவரங்கள் நியாயம் சேர்க்காது.
ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டை அவர் தன்னை எப்படிக் கையாண்டார் என்பதும், குறிப்பாக வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டின் தூதராக எப்படி மாறினார் என்பதெல்லாம் அசாத்தியமானது. அவர் லார்ட்ஸில் விளையாடிய விதம், அவருடைய அணியின் எண்ணங்களை மொத்தமாக மாற்றியது - அது உண்மையில் சாத்தியமற்றது. நான் அதில் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று ரவி சாஸ்திரி வேதனையுடன் எமோசனலாக பேசியுள்ளார்.