விஜய் ஹசாரே 2023: முதல்முறையாக மோதும் ராஜஸ்தான் - ஹரியானா.. இதற்கு முன்பு சாம்பியன் ஆன அணிகள் எவை?

நாளை நடைபெற இருக்கும் விஜய் ஹசாரே இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா அணிகள் முதல்முறையாக மோத உள்ளன.
விஜய் ஹசாரே கோப்பை
விஜய் ஹசாரே கோப்பைட்விட்டர்

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக, இந்த தொடரில் ஏ, பி, சி, டி, இ ஆகிய பிரிவுகளில் 38 அணிகள் பிரிக்கப்பட்டிருந்தன. இதில் ஏ,பி, சி ஆகிய பிரிவுகளில் தலா 8 அணிகளும், டி மற்றும் இ பிரிவுகளில் தலா 7 அணிகளும் இடம்பெற்றிருந்தன. அதன்படி, லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த அணிகளும் (5), 2வது இடம்பிடித்த அணிகளில் 1 சிறந்த அணியும் (ரன்ரேட் அடிப்படையில்) என 6 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதிபெற்றன.

அடுத்து, 2வது இடம்பிடித்த எஞ்சிய 4 அணிகளில் இருந்து வெற்றிபெற்ற 2 அணிகள் கால்இறுதியை எட்டின. இதில் வெற்றிபெற்ற கர்நாடகா, தமிழ்நாடு, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய அரையிறுதிக்கு தகுதிபெற்றன. இதில் முதல்முறையாக ஹரியானா மற்றும் ராஜஸ்தான் அணிகள் விஜய ஹசாரே தொடரின் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. முன்னதாக நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் தமிழ்நாடு அணியை, ஹரியானாவும் இரண்டாவது அரையிறுதியில் கர்நாடகா அணியை ராஜஸ்தானும் வீழ்த்தி முதல்முறையாக பைனலுக்குள் நுழைந்துள்ளன.

இதையும் படிக்க: பிரமாண்ட ஏற்பாடு.. ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் ’முதல்முறை எம்.எல்.ஏ’ ஆன பஜன்லால் சர்மா!

2007ஆம் ஆண்டுமுதல் விஜய் ஹசாரே பெயரில் விளையாடப்பட்டு வரும், இந்த தொடரில் செளராஷ்டிரா முதல்முறையாக சாம்பியன் ஆனது. அடுத்து 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் தமிழ்நாடு சாம்பியன் ஆகி சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் (2010), பெங்கால் (2011), டெல்லி (2012) ஆகிய அணிகள் சாம்பியன் ஆகின. அதற்குப் பிறகு 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக கர்நாடக அணி சாம்பியன் ஆனது. அடுத்து குஜராத் (2015), தமிழ்நாடு (2016), கர்நாடகா (2017), மும்பை (2018), கர்நாடகா (2019), மும்பை (2020), ஹிமாச்சல் (2021), செளராஷ்டிரா (2022) ஆகிய அணிகள் இதுவரை சாம்பியன் ஆகியுள்ளன. இதில் அதிகபட்சமாக கர்நாடகா அணி 4 முறை (2013, 2014, 2017, 2019) சாம்பியன் ஆகியுள்ளது. தமிழ்நாடு 3 முறை (2008, 2009, 2016) சாம்பியன் ஆகியுள்ளது. சவுராஷ்டிரா (2007, 2022) மற்றும் மும்பை (2018, 2020) ஆகிய அணிகள் தலா 2 முறை சாம்பியன் ஆகியுள்ளன.

2023 தொடரில் நடப்புச் சாம்பியன் ஆன சவுராஷ்டிரா அணி, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறாமலேயே வெளியேறி உள்ளது. அதேநேரத்தில் அதிகமுறை சாம்பியன்கள் ஆன கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அணிகள் இந்த முறையும் அரையிறுதிப் போட்டிவரை முன்னேறி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கேரளா: வயதான மாமியாரை கீழே தள்ளிவிட்டு தாக்கிய மருமகள்.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com