23 வயதில் 2 உலகக்கோப்பை சதங்கள்! சச்சின் மட்டுமே படைத்திருந்த சாதனையை சமன்செய்த ரச்சின்!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 2வது சதத்தை பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
rachin - sachin
rachin - sachinTwitter

தரம்சாலாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஆஸ்திரேலியா நிர்ணயித்த 389 ரன்களை நோக்கி விளையாடியது நியூசிலாந்து அணி.

ஹெட்டின் சதத்தால் 388 ரன்களை குவித்த ஆஸி!

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் களமிறங்கிய டிராவிச் ஹெட் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 10 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிய ஹெட், முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.

மறுமுனையில் தன்னுடைய பங்கிற்கு வெளுத்துவாங்கிய டேவிட் வார்னர் 6 சிக்சர்களை பறக்கவிட்டு 81 ரன்கள் அடிக்க, முதல் விக்கெடுக்கே 175 ரன்களை சேர்த்தது ஆஸ்திரேலியா அணி. ஹெட் 109 ரன்னிலும், வார்னர் 81 ரன்னிலும் அவுட்டாகி வெளியேற அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஸ், ஸ்மித், லபுசனே மூவரும் தொடக்கம் கிடைத்தும் விரைவாகவே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.

Travis Head
Travis Head

பின்னர் களமிறங்கிய அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் குறைவான பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு ஆட்டத்தையே தலைகீழாக மாற்றினார். 24 பந்தில் 41 ரன்கள் அடித்து மேக்ஸ்வெல் வெளியேற, இறுதியாக களத்திற்கு வந்த ஜோஸ் இங்கிலீஸ் மற்றும் பாட் கம்மின்ஸ் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஜோஸ் இங்கிலீஸ் 4 பவுண்டரிகள் விரட்ட, பாட் கம்மின்ஸ் 4 சிக்சர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். 49.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 388 ரன்களை குவித்தது.

தனி ஆளாக நின்று சதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா!

389 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்கவீரர்களும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். நல்ல தொடக்கத்தை கொடுத்த டெவான் கான்வே மற்றும் வில் யங் ஜோடியை, அடுத்தடுத்து வெளியேற்றி அசத்தினார் ஹசல்வுட். 72 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாந்து அணியை, அதற்கு பிறகு கைக்கோர்த்த ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் இருவரும் மீட்க போராடினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்த, 96 ரன்கள் என்ற நல்ல பார்ட்னர்ஷிப்பை 51 ரன்னில் மிட்செல்லை வெளியேற்றி முடிவுக்கு கொண்டுவந்தார் ஆடம் ஷாம்பா.

Rachin
Rachin

பின்னர் வந்த கேப்டன் பொறுப்பை உணராமல் ரிவர்ஸ் ஷாட் ஆடி வெளியேற, 23 வயதேயான ரச்சின் ரவீந்திரா பொறுப்பை தன் தோளில் சுமந்து விளையாடினார். சுமாரான பந்துகளை எல்லாம் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்ட ரச்சின், நிதானமாக அடுத்த பந்தில் எல்லாம் சிங்கிள் எடுத்து பெரிய இலக்கை நோக்கி எப்படி விளையாட வேண்டும் என பாடம் புகட்டினார். 9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என பறக்கவிட்ட ரச்சின் இந்த உலகக்கோப்பையில் தன்னுடைய 2வது உலகக்கோப்பை சதத்தை எடுத்துவந்தார். சிறப்பாக விளையாடிய ரச்சினை ஒரு அற்புதமான ஸ்லோவர் டெலிவரியில் ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் 116 ரன்னில் வெளியேற்றி அசத்தினார். விறுவிறுப்பான போட்டியில் வெற்றிக்காக போராடியது நியூசிலாந்து அணி.

aus vs nz
aus vs nz

கடைசிவரை விறுவிறுப்பாக சென்ற போட்டியில் 2 பந்துக்கு 7 ரன்கள் தேவைப்பட, 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது ஆஸ்திரேலியா அணி.

சச்சின் மட்டுமே செய்த சாதனையை சமன்செய்த ரச்சின்!

நடப்பு 2023 உலகக்கோப்பையின் சிறந்த கண்டுபிடிப்பு என்றால் அது ரச்சின் ரவீந்திராதான். உலகின் தலைசிறந்த அணிகளான இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு உலகக்கோப்பை சதங்களை பதிவுசெய்திருக்கும் ரச்சின் ரவிந்திரா, சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்தினார்.

சச்சின் மற்றும் டிராவிட் பெயர்களை ஒன்றாக வைத்திருக்கும் ரச்சின், 23 வயதில் 2 உலகக்கோப்பை சதங்களை பதிவுசெய்துள்ளார். இவ்வளவு குறைவான வயதில் 2 உலகக்கோப்பை சதங்களை அடித்தது சச்சின் மட்டும் தான். சச்சினும் 23 வயதில்தான் இரண்டு உலகக்கோப்பை சதங்களை அடித்திருந்தார்.

sachin
sachin

இதன்மூலம் 24 வயதை எட்டுவதற்குள் 2 உலகக்கோப்பை சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இருந்த ஒரே வீரரான சச்சின் சாதனையுடன் இணைந்துள்ளார் ரச்சின் ரவிந்திரா. சச்சின் இந்த சாதனையை 1996 உலகக்கோப்பையில் செய்திருந்த நிலையில், ரச்சின் நடப்பு 2023 உலகக்கோப்பையில் படைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com