IPL போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்ற அஸ்வின்.. எதிர்கால திட்டம் என்ன?
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக அனைத்து வித கிரிக்கெட்டிலும் சேர்த்து அதிகமான விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் தனது அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். அதேநேரத்தில், ஐபிஎல் தொடர் மற்றும் டி.என்.பி.எல். தொடர்களில் பங்கேற்று விளையாடி வந்தார். இந்த நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்தும் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து அவர், “சிறப்பான நாளில், சிறப்பான ஆரம்பம். ஒவ்வொரு முடிவும் ஓர் அழகான ஆரம்பம் என்பார்கள். அப்படி, ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நாள் இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் பல்வேறு லீக்குகளைச் சுற்றியுள்ள விளையாட்டை ஆராய்பவராக எனது நேரம் இன்று தொடங்குகிறது. கடந்த பல ஆண்டுகளாக அற்புதமான நினைவுகள் மற்றும் உறவுகளை வழங்கிய அனைத்து உரிமையாளர்களுக்கும், மிக முக்கியமாக @IPL மற்றும் @BCCI-க்கும் அவர்கள் இதுவரை எனக்கு அளித்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு முன்னால் இருப்பதை அனுபவித்து, சிறப்பாகப் பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிற நாடுகளில் அவர் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். அதாவது, ஐபிஎல்லைப் போன்று பிற நாடுகளிலும் டி20 தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அதில் விளையாட இருப்பதாக அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார். விரைவில் தென்னாப்பிரிக்காவில் SA20 மற்றும் ILT20க்கான வீரர்கள் ஏலம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடர்களில் 5 அணிகளில் விளையாடியுள்ள அஸ்வின், இதுவரை 221 போட்டிகளில் 187 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.