”1.3 லட்சம் இந்திய ரசிகர்களை வாயடைக்க வைப்பதுதான் எங்கள் இலக்கு”- சீண்டும் பாட் கம்மின்ஸ்

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை நிலைகுலைய வைக்க எங்களால் முடியும் - பாட் கம்மின்ஸ்
Pat Cummins
Pat Cumminsweb

2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டி மோதலுக்கு பிறகு, மீண்டும் 20 வருடங்களுக்கு பின் இந்திய அணியை ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான மோதலில் 20 வருடத்திற்கு முன் பெற்ற பெரிய தோல்விக்கு ஆஸ்திரேலியாவை இந்தியா பழிவாங்கும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் நாளை நரேந்திர மோடி மைதானத்திற்கு திரளவிருக்கின்றனர்.

ind vs aus
ind vs aus pt desk

இந்நிலையில் தான், இந்திய ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பையும் சத்தத்தையும் அமைதியாக்குவதுதான் ஆஸ்திரேலியாவின் இலக்கு என கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார். அவருடைய இந்த கருத்து இந்திய ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த மைதானத்தையும் வாயடைக்க வைப்பதுதான் இலக்கு! - பாட் கம்மின்ஸ்

கோப்பை வெல்வதற்கான இறுதிப்போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், “ 2003-ல் இருந்த இரண்டு தரப்பு வீரர்களும் தற்போது இல்லை. அது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்தது. ஆனால் தற்போது இந்திய அணியினர் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். எப்படி இருப்பினும் இந்த இந்திய அணியை நிலைகுலைய வைக்க எங்களால் முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்களுக்கு எதிராக நாங்கள் நல்ல வெற்றிகளை பதிவுசெய்துள்ளோம். எனவே இது ஒரு நல்ல இறுதிப் போட்டியாக இருக்கப்போகிறது.

Pat Cummins
Pat Cummins

இந்திய அணியை தாண்டி மைதானம் முழுக்க சுமார் 1,30,000 ரசிகர்கள் இந்தியாவின் வெற்றிக்காக ஆதரவு குரல் எழுப்பப்போகிறார்கள். மொத்த கூட்டமும் ஒருதலைபட்சமாகவே இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய கூட்டத்திற்கு எதிராக வெற்றிபெற்று அவர்களின் வாயடைத்து அமைதியாக்குவதை விட திருப்திகரமான ஒரு விசயம் வேறெதுவும் இல்லை. அதுவே நாளை எங்களின் இலக்கு” என்று பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com