வரலாறு படைத்தது பாகிஸ்தான்.. முதல் அணியாக தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து அசத்தல்!
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 2-0 என பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி தொடரை வென்றது. இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி 3 போட்டிகளையும் வென்று 3-0 என தென்னாப்பிரிக்கா அணியை ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்துள்ளது.
3-0 என ஒயிட்வாஷ் செய்த முதல் அணி பாகிஸ்தான்..
இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 308 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சையிம் ஆயுப் முதல் போட்டியை தொடர்ந்து 3வது போட்டியிலும் சதம்டித்து அசத்தினார்.
309 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியில் விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசனை தவிர வேறு எந்த வீரர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. 81 ரன்கள் அடித்து கிளாசன் போராடினாலும் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3-0 என ஒருநாள் தொடரை வென்று தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது. தென்னாப்பிரிக்காவை அவர்களின் சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்த முதல் அணி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது.