ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் காலி.. SA-க்கு 277 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 378 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் 167 ரன்னுக்கு சுருண்டது.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 12-ம் தேதி தொடங்கிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்கள் சேர்த்தது. அதனைத்தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 269 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிறப்பாக விளையாடிய தென்னாப்பிரிக்க வீரர் டோனி டி சோர்ஸி சதமடித்து அசத்தினார்.
முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் நல்ல இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்ப்பார்த்தபோது, சேனுரான் முத்துசாமியின் சுழற்பந்துவீச்சில் 167 ரன்களுக்கே சுருண்டது. இன்றைய ஒரே நாளில் மட்டும் இரண்டு அணிகளும் சேர்ந்து 16 விக்கெட்டுகளை இழந்தனர்.
இந்நிலையில் 277 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிவரும் தென்னாப்பிரிக்கா, 3வது நாள் ஆட்ட முடிவில் 51/2 என முடித்துள்ளது. தென்னாப்பிரிக்காவை ஆல் அவுட் செய்து வெற்றியை வசப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது.