’அவர்களை மூச்சுவிட அனுமதி.. துன்புறுத்தாதே’ - அமீர் உடன் இந்தியாவை ட்ரோல் செய்த மற்றொரு PAK வீரர்!
2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தான் வீரர் முகமது அமீரின் வைரல் கணிப்பிற்கு பின், 'அவர்களை மூச்சுவிட அனுமதி' என மற்றொரு பாகிஸ்தான் வீரர் ட்ரோல் செய்துள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, தற்போது அரையிறுதிக்கு செல்லுமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி நெட் ரன்ரேட்டில் -3.800 என அதள பாதளத்திற்கு சென்றுள்ளது.
மீதமிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக வென்றால் கூட இந்தியா அரையிறுதிக்கு தகுதிபெற முடியும் என்ற உத்தரவாதம் கிடையாது.
இப்படியான சூழலில் தான் முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் ‘இந்தியா அரையிறுதிக்கு செல்லாது’ என்று முன்கூட்டியே கணித்தது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் முகமது அமீரை குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருக்கும் மற்றொரு பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் இந்தியாவை ட்ரோல் செய்துள்ளார்.
இந்தியாவை மூச்சுவிட அனுமதி..
இந்திய வீரர் அபிஷேக் சர்மாவை திறமையற்ற வீரர் என்றும், பந்தை பார்த்து சுற்றும் சாதாரண வீரர் என்றும் முகமது அமீர் கூறியது பேசுபொருளான நிலையில், அபிஷேக் சர்மா தொடர்ந்து 3 போட்டிகளில் 0 ரன்னுக்கு அவுட்டாகி முகமது அமீரின் கூற்றை மெய்யாக்குவது போல் செயல்பட்டார்.
அப்போதே அமீரின் கருத்துக்கள் கவனம் பெற்ற நிலையில், தென்னாப்பிரிக்கா போட்டிக்கு முன்னதாக ‘இந்தியா அரையிறுதிக்கு செல்லாது என்றும், தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சிறந்த அணிகளாக தெரிகிறது என்றும் கூறி மற்றொரு குண்டை இந்தியாவை நோக்கி எறிந்தார் முகமது அமீர்.
தற்போது அமீர் சொன்னதை போல இந்திய அணி மிகப்பெரிய வரலாற்று படுதோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், அமீரின் கூற்று மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தசூழலில் அமீர் கூறுவது உண்மையாகிவிட்டது என்பதுபோல எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்திருக்கும் மற்றொரு பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப், ”முகமது அமீர், நீ இந்தியாவை அச்சுறுத்துகிறாய்! முன்பு நீ இந்திய அணியை கிரிக்கெட் களத்தில் துன்புறுத்தினாய், இப்போது அவர்களை ஸ்டுடியோவில் இருந்தபடியே பயமுறுத்துகிறாய். அவர்களை மூச்சு விட அனுமதி, அவர்கள் ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டனர்.
கடந்த உலகக்கோப்பையில் தவறவிட்ட தென்னாப்பிரிக்கா அணி விட்டஇடத்திலிருந்தே தற்போது முன்னேறியுள்ளது. அவர்கள் ஒரு வலிமையான அணியாக செயல்பட்டனர், டாப் ஆர்டர் தடுமாறிய போதும் மிடில்ஆர்டர் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களின் பந்துவீச்சும் அபாரமானதாக இருந்தது” என பதிவிட்டுள்ளார்.

