இவங்க இன்னும் திருந்தல.. 249/3-ல் இருந்து 271-க்கு ஆல்அவுட்! பஞ்சரான பாகிஸ்தான்!
சாம்பியன்ஸ் டிராபி முடித்த கையோடு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி, 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் முதலிய வீரர்கள் இடம்பெறாமல் இளம்வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணி பங்கேற்றது. 5 போட்டிகளில் 4-ல் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, ஒரு போட்டியில் மட்டுமே வென்று டி20 தொடரை பறிகொடுத்தது.
இதனைத்தொடர்ந்து பாபர் அசாம், முகமது ரிஸ்வான் அனைவரும் கம்பேக் கொடுக்க ஒருநாள் தொடரின் முதல் போட்டி நடந்துள்ளது.
22 ரன்னில் 7 விக்கெட்டை பறிகொடுத்த பாகிஸ்தான்..
இன்று காலை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பிரேஸ்வெல் தலைமையிலான நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. 13 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என துவம்சம் செய்த சாப்மன் 132 ரன்களும், டேரில் மிட்செல் 76 ரன்களும் அடித்து அசத்த 50 ஓவரில் 344/9 ரன்களை குவித்தது நியூசிலாந்து.
345 ரன்கள் எடுத்தால் வெற்றி என பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரர்கள் அப்துல்லா மற்றும் உஸ்மான் இருவரும் சேர்ந்து 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அடுத்த நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் 74 ரன்களும், சல்மான் ஆகா 58 ரன்களும் அடித்து அசத்த, 38.4 ஓவரில் 249/ 3 என்ற நல்ல நிலைமையிலேயே இருந்தது பாகிஸ்தான் அணி.
இன்னும் 10 ஓவரில் எட்டக்கூடிய இலக்கு மற்றும் கையில் விக்கெட்டுகளும் இருப்பதால் பாகிஸ்தான் அணியே வெற்றிபெறும் என நினைத்தபோது, அடுத்த 22 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 271 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது நியூசிலாந்து அணி.