சாம்பியன்ஸ் டிராபி | வெளிநாட்டு விருந்தினர்களைக் கடத்த சதி.. எச்சரிக்கை விடுத்த உளவுப் பிரிவு!
பாகிஸ்தானில் 8 அணிகள் கலந்துகொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி போட்டிகள் மட்டும் பாதுகாப்பு காரணமாக துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தானியர்கள் மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டினரும் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு விருந்தினர்களை கடத்த, தீவிரவாத அமைப்புகள் திட்டம் தீட்டியிருப்பதாக பாகிஸ்தானின் புலனாய்வுப் பிரிவு எச்சரித்துள்ளது. தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான் (TTP), ISIS மற்றும் பலுசிஸ்தானை தளமாகக் கொண்ட பிற குழுக்கள் உட்பட பல பயங்கரவாத அமைப்புகள் இதில் ஈடுபட்டிருப்பதாக அது எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டினரை கடத்தி, பணயம் வைக்க அந்த அமைப்புகள் திட்டமிட்டிருப்பதாக எச்சரித்துள்ளது. இதையடுத்து, வீரர்கள் மற்றும் அவர்களுடன் வரும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர், ரேஞ்சர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் உட்பட உயர்மட்ட பாதுகாப்பு குழுக்களை அதிகளவில் நிறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறும் நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இப்போது சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்கத்திலேயே பயங்கரவதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த காலங்களில் பாகிஸ்தானில் வெளிநாட்டினர் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. ஷாங்லாவில் 2024இல் சீன பொறியாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் 2009இல் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் போன்ற சம்பவங்கள் அதன் பாதுகாப்புத் தயார்நிலை குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளன.