ஆசியக் கோப்பை: முதல் போட்டியிலேயே மிரட்டல் அடி! ஒரு போட்டியிலேயே பல சாதனைகள் படைத்த பாபர் அசாம்!

ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதல் போட்டியிலேயே சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
babar azam
babar azamtwitter

6 அணிகள் பங்கு பெற்றுள்ள 16வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (ஆகஸ்ட் 30) பாகிஸ்தானில் தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் இன்று, பாகிஸ்தானும் நேபாளமும் களம் கண்டன. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

இதில் தொடக்க வீரர்கள் ஏமாற்றினாலும் கேப்டன் பாபர் அசாமும், இப்திகார் அகமதுவும் இணைந்து நல்லதொரு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். முடிவில் அந்த அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. அவ்வணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 131 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் உதவியுடன் 151 ரன்கள் எடுத்தார். அவருக்குத் துணையாக நின்ற இப்திகார் அகமதுவும் 71 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் 109 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தப் போட்டியில் கேப்டன் பாபர் அசாம் 151 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒருசில சாதனைகளையும் படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் பாபர் அசாம் அடித்த சதம் 19ஆகப் பதிவானது. அந்த 19வது சதத்தை, பாபர் அசாம் 102 இன்னிங்ஸ்களில் எடுத்துள்ளார். இதன்மூலம், குறைந்த இன்னிங்ஸில் 19 சதங்கள் அடித்த பேட்டர்கள் பட்டியலில் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லாவும் (104 இன்னிங்ஸ்) 2வது இடத்தில் உள்ளார். இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி 124 இன்னிங்ஸ்களில் 19 சதங்களை நிறைவுசெய்து 3வது இடத்தில் உள்ளார்.

அதுபோல், ஆசியக் கோப்பை போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் பாபர் அசாம். கடந்த 2012ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான விராட் கோலி 183 ரன்கள் எடுத்ததே தற்போதுவரை முதல் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் 151 ரன்கள் எடுத்ததன் மூலம் பாபர் அசாம் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். அடுத்து, ஆசியக் கோப்பை வரலாற்றில் 150 ரன்கள் எடுத்த முதல் கேப்டன் என்ற பெருமையையும் பாபர் அசாம் பெற்றுள்ளார்.

மேலும், கேப்டனாக முதல் 30 இன்னிங்ஸில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பாபர் அசாம் பெற்றிருக்கிறார். பாபர் அசாம் 8 சதம் அடித்த நிலையில், விராட் கோலி 6 சதமும் கங்குலி 5 சதமும் அடித்திருக்கிறார்கள். மேலும், அணி 300 ரன்களுக்கு மேல் அடித்தபோது அதிக சராசரி வைத்திருக்கும் வீரர்கள் பட்டியலில் பாபர் அசாம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். சச்சின் 86.8 சராசரியுடன் முதலிடத்திலும், ரோகித் சர்மா 85 சராசரியுடன் இரண்டாவது இடத்திலும் உள்ள நிலையில் பாபர் அசாம் 82.2 சராசரியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். இதேபோன்று ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரர்கள் இல்லாமல் அதிக முறை 150 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பாபர் அசாம் தற்போது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். தவிர பாபர் அசாம் தன்னுடைய கடைசி 22 இன்னிங்ஸ்களில் 6 சதங்களையும், 11 அரைசதங்களையும் அடித்துள்ளார்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் அணியை தோற்கடித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com