இந்தியாவுக்கு எதிரான போட்டி புறக்கணிப்பு.. பாகிஸ்தான் நிலைபாடு குறித்து ஐசிசி அதிருப்தி!
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில், பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்தத் தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 20 அணிகள் பங்கேற்கவிருக்கின்றன. இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டு வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, பாகிஸ்தான் அணி உலகக் கோப்பைப் போட்டிகளுக்காக இந்தியா மறுத்திருந்த நிலையில், பாகிஸ்தான் அணிகளின் போட்டிகள் அனைத்தும் இலங்கைக்கு மாற்றப்பட்டது.
அதேபோல, பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி சமீபத்தில், வங்கதேச அணியும் இந்தியாவுக்கு வர மறுத்தது. இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), வங்கதேச அணியை டி 20 உலகக் கோப்பைத் தொடரில் இருந்து நீக்கி அதற்கு பதிலாக, ஸ்காட்லாந்து அணி சேர்த்தது. இதன் காரணமாக, வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் அணியும் டி20 தொடரில் இருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தான், பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்புவில் நடக்கும் இந்தியாவுடனான் போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்பில் புறக்கணிப்பிற்கான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை.
இதுகுறித்து பாகிஸ்தான் அரசாங்கம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், ”பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருந்த லீக் போட்டியில் மட்டும் பாகிஸ்தான் அணி விளையாடாது” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பது, விளையாட்டின் உணர்வு மற்றும் புனிதத்தை சீர்குலைக்கும் என, ஐசிசி கூறியுள்ளது. பாகிஸ்தானின் நிலைப்பாடு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐசிசி, பாகிஸ்தானின் முடிவு ஒரு சர்வதேச தொடரின் அடிப்படை விதிகளுடன் ஒத்துப்போகவில்லை என தெரிவித்துள்ளது. இம்முடிவினால் பாகிஸ்தான் கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட் கட்டமைப்பிலும் ஏற்படவுள்ள நீண்டகால விளைவுகளை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கவனத்தில் கொள்ளும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் பரஸ்பரம் ஏற்கக்கூடிய ஒரு தீர்வை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டறியும் என நம்புவதாகவும் ஐசிசி கூறியுள்ளது.

