Emerging Asia Cup|“இந்திய அணியில் சிறு குழந்தைகளை அனுப்புங்கன்னு நாங்கள் கூறவில்லை”-பாக். ஏ கேப்டன்!

ஆசிய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்ட வளர்ந்து வரும் ஆடவர்களுக்கான ஆசியக்கோப்பையில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது குறித்து பேசியிருக்கும் பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹரிஸ், "சிறுவர்களை தான் அனுப்ப வேண்டும் என யாரும் கூறவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
Mohammad Haris
Mohammad Haristwitter

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மூலம் நடத்தப்பட்ட 'வளர்ந்து வரும் ஆடவர்களுக்கான ஆசியக்கோப்பை'யில் 8 நாடுகளின் ஏ அணிகள் பங்குபெற்று விளையாடின. கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற்ற தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணியை 128 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியது பாகிஸ்தான் அணி.

இந்த இறுதி போட்டியில் டாப் ஆர்டர் வீரர்களாக விளையாடிய பாகிஸ்தான் வீரர்களின் வயது 27க்கும் அதிகமாக இருந்ததும், அதிலும் இறுதிப்போட்டியில் சதமடித்த தயப் தாஹிரின் வயது 30ஆக இருந்ததும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.

ACC Mens Emerging Teams Asia Cup 2023
ACC Mens Emerging Teams Asia Cup 2023

பல இந்திய ரசிகர்கள், ‘இந்திய அணியில் இருக்கும் 80% வீரர்கள் 22 வயதில் இருக்கின்றனர். ஆனால் பாகிஸ்தான் அணியில் 29-30 வயதில் இருக்கின்றனர். இந்த தொடர் எப்படி வளர்ந்து வரும் வீரர்களுக்கானது என கூறமுடியும்? வளர்ந்த வீரர்கள், வளரும் வீரர்களை வீழ்த்தி வெற்றிபெற்றுவிட்டனர். பாகிஸ்தான் வீரர்கள் ஏமாற்றிவிட்டனர்’ என பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.

இந்நிலையில் அதுகுறித்து தற்போது பேசியிருக்கும் பாகிஸ்தான் ஏ அணி கேப்டன் முகமது ஹரிஸ், “இந்திய அணியில் சிறுவர்களை மட்டும்தான் போட்டிக்கு அனுப்ப வேண்டும் என்று யாரும் கூறவில்லை” என தெரிவித்துள்ளார்.

சிறு குழந்தைகளை போட்டிக்கு அனுப்புங்கள் என்று நாங்கள் கூறவில்லை!

பாட்காஸ்ட் ஒன்றில் இதுபற்றி பேசியிருக்கும் பாகிஸ்தான் ஏ அணியின் கேப்டன் முகமது ஹரிஸ், “பாகிஸ்தான் ஏ அணியில் பல சீனியர் வீரர்கள் இருந்ததாக மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். சர்வதேச அணியில் விளையாடியவர்களை நாங்கள் அனுப்பியதாகவும் கூறுகிறார்கள். இந்திய அணியில் சிறு குழந்தைகளை விளையாட அனுப்புங்கள் என்று நாங்கள் கூறவில்லையே. எங்கள் அணியில் எத்தனை அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர்? எத்தனை சர்வதேச போட்டிகளில் நாங்கள் விளையாடினோம்? சைம் 5 போட்டிகளிலும், நான் 6 போட்டிகளிலும் விளையாடியுள்ளோம். ஆனால் இந்திய வீரர்கள் ஒட்டுமொத்தமாக 260 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளனர்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

20 வயது நிரம்பிய யாஸ் துள் கேப்டனாக வழிநடத்திய போதும் இந்திய அணி க்ரூப் ஸ்டேஜ் போட்டியில் பாகிஸ்தான் அணியை 205ல் சுருட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ஆனால் அந்த போட்டியில் ஃபைனலில் சதமடித்த 30 வயது நிரம்பிய தயப் தாஹிர் இடம்பெறவில்லை. அதேபோல பாகிஸ்தான் ஏ அணி வீரர்கள் மொத்தமாக 85 தேசிய அளவிலான ஆட்டங்களில் விளையாடியுள்ளனர். பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் முகமது வாசிம் ஜூனியர், 2 டெஸ்ட், 14 ஒருநாள் மற்றும் 27 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com