டி20 உலகக்கோப்பை| இந்தியா அரையிறுதி செல்லுமா..? இருக்கும் 2 வழிகள் என்ன..?
இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல தென்னாப்பிரிக்கா உதவியின்றி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளை எதிர்த்து மிகப்பெரிய வெற்றிகளைப் பெற வேண்டும். இதனால் நெட் ரன்ரேட்டில் முன்னேறி தகுதிபெற முடியும்.
நம்பர் 1 டி20 அணி, நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன், நம்பர் 1 டி20 பவுலர், அதிரடிக்கு பெயர் போன வீரர்கள், 8ஆம் வரிசை வரை வெடிக்கக்கூடிய பேட்டிங், கடந்த 3 ஆண்டுகளில் 61 போட்டிகளில் 8 ஆட்டங்களில் மட்டுமே தோல்வி, 300 ரன்கள் அடிக்கப்போகும் முதல் அணி என்றெல்லாம் புகழப்பட்டது இந்திய அணி.
சொந்த மண்ணில் அசுர பலத்துடன் இந்தியா வருகிறது, அவர்களே கோப்பையை வெல்லப்போகிறார்கள், கோப்பையை வெல்ல நினைக்கும் அணி முதலில் இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில், தற்போது ‘இதையா இவ்வளவு நேரம் தூக்கிட்டு இருந்திங்க’ என்பது போல இந்தியாவை நசுக்கி, பிழிந்து பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது தென்னாப்பிரிக்கா.
இந்தியா தகுதிபெற என்ன வழி..?
இந்திய அணியில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது தென்னாப்பிரிக்கா அணி. ஒரு வலுவான அணியுடன் மோதும் வரை இந்தியாவிடம் இருந்த பிரச்னைகள் வெளியில் தெரியாமல் இருந்தது, தற்போது அது வெளிப்பட்டுவிட்டது. இதுதான் இந்தியா விழித்துக்கொள்வதற்கான நேரம் என்று முன்னாள் வீரர்கள் கருத்திட்டு வருகின்றனர்.
இந்தசூழலில் ஒரு மிகப்பெரிய தோல்வியிலிருந்து இந்தியாவால் மீண்டுவந்து அரையிறுதிக்கு தகுதிபெற முடியுமா? அப்படி முடியும் என்றால் அதற்கு என்னென்ன வழிகள் இருக்கிறது என்ற கேள்விகள் எழுகின்றன.
இந்நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற 2 வழிகள் மட்டுமே இருக்கிறது. அது என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்..
தென்னாப்பிரிக்கா உதவ வேண்டும்..!
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி நெட் ரன்ரேட்டில் -3.800 என படுகுழியில் விழுந்துள்ளது. இப்படி ஒரு மோசமான நிலையிலிருந்து முன்னேறி இந்தியா மீண்டுஎழுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
இந்தியா அரையிறுதிக்கு செல்வதற்கான வழியை எளிமையாக்க தென்னாப்பிரிக்கா அணியால் முடியும். தென்னாப்பிரிக்கா அணி அவர்களின் மீதமிருக்கும் 2 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே இரண்டு அணிகளையும் வீழ்த்த வேண்டும். அப்படி நடந்தால் இந்தியா அதிக டார்கெட், மிகப்பெரிய வெற்றி என போராட வேண்டிய அவசியமில்லை. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே இரண்டு அணிகளையும் வீழ்த்திவிட்டாலே அரையிறுதிக்கு இந்தியா தகுதிபெற்றுவிடும்.
மிகப்பெரிய வெற்றிகள் தேவை..!
ஒருவேளை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வென்றுவிட்டால் இந்தியாவிற்கு அது நெட் ரன்ரேட் (NRR) அளவிலான தகுதியை நோக்கி நகர்த்திவிடும்.
அப்படி நடந்துவிட்டால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இந்தியா 80 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றியை பதிவுசெய்யவேண்டும். மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும் பிரமாண்ட வெற்றியை உறுதிசெய்யவேண்டும்.
அதற்கு 300 ரன்கள் அடிக்கப்போகிறோம், 10 விக்கெட்டுகளில் வெல்லப்போகிறோம் என்ற யூகங்களை எல்லாம் இந்திய அணி மெய்யாக்க வேண்டும். ஒருவேளை 240 ரன்கள் அடித்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்காவின் உதவி தேவையற்றதாகிவிடும்.
ஆனால் இதற்கு இடையில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், சூப்பர் 8 சுற்றுக்கான குழுவில் இந்தியாவுடன் இருக்கும் மற்ற 3 அணிகளும் குரூப் சுற்றில் நம்பர் 1 இடத்தில் இருந்தவை. ஜிம்பாப்வே ஆஸ்திரேலியா, இலங்கை என இரண்டு பெரிய அணிகளை அடித்துவிட்டு தான் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

