NZvPAK | பெங்களூருவில் நியூசிலாந்து & பாகிஸ்தான் மோதல்..!

நான்காவது மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கும் இவ்விரு அணிகளுள் ஒரு அணியே அரையிறுதிக்குள் போவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் முதல் மூன்று இடங்கள் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
NzVPAK
NzVPAKPTI
போட்டி 35: நியூசிலாந்து vs பாகிஸ்தான்
மைதானம்: எம் சின்னஸ்வாமி ஸ்டேடியம், பெங்களூரு
போட்டி தொடங்கும் நேரம்: நவம்பர் 4, காலை 10.30 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

நியூசிலாந்து
போட்டிகள்: 7, வெற்றிகள் - 4, தோல்விகள் - 3, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 8
புள்ளிப் பட்டியலில் இடம்: நான்காவது
சிறந்த பேட்ஸ்மேன்: ரச்சின் ரவீந்திரா - 415 ரன்கள்
இறந்த பௌலர்: மிட்செல் சான்ட்னர் - 14 விக்கெட்டுகள்
இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் என தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்று மிகச் சிறப்பாக உலகக் கோப்பையை தொடங்கியிருந்தது நியூசிலாந்து. ஆனால் இப்போது இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க என மூன்று பெரிய அணிகளோடும் தோல்வியைத் தழுவியிருக்கிறது அந்த அணி. அதிலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி போட்டியில் 190 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது பிளேக் கேப்ஸ்.

பாகிஸ்தான்
போட்டிகள்: 7, வெற்றிகள் - 3, தோல்விகள் - 4, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 6
புள்ளிப் பட்டியலில் இடம்: ஆறாவது
சிறந்த பேட்ஸ்மேன்: முகமது ரிஸ்வான் - 359 ரன்கள்
சிறந்த பௌலர்: ஷஹீன் ஷா அஃப்ரிடி - 16 விக்கெட்டுகள்
நெதர்லாந்து, இலங்கை அணிகளை வீழ்த்தி நன்றாக இத்தொடரை தொடங்கியது பாகிஸ்தான். நியூசிலாந்தைப் போல் இந்தியாவுக்கு எதிராக அவர்களது தோல்விப் பயணம் தொடங்கியது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா என தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்தது அந்த அணி. இருந்தாலும் ஒரு வழியாக கடைசிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.

இது காலிறுதி ஆட்டம்!

நான்காவது மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கும் இவ்விரு அணிகளுள் ஒரு அணியே அரையிறுதிக்குள் போவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் முதல் மூன்று இடங்கள் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நான்காவது இடத்துக்கான ரேஸில் முன்னேறலாம். இருந்தாலும், நியூசிலாந்து அணி தங்கள் கடைசி லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது. அது அவர்களுக்கு ஓரளவு சாதகமான அம்சம். பாகிஸ்தானோ இங்கிலாந்துடன் மோதவேண்டும். அதனால், இந்தப் போட்டியில் நியூசிலாந்தை விட பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகம். இன்னொரு முக்கியமான விஷயம், நியூசிலாந்து இந்தப் போட்டியில் தோற்றாலும், அவர்கள் அரையிறுதி வாய்ப்பில் நீடிப்பார்கள். அதேசமயம் பாகிஸ்தான் தோற்றால், அரையிறுதிக்கு நிச்சயம் தகுதி பெற முடியாது.

மைதானம் எப்படி இருக்கும்?

சின்னசாமி ஸ்டேடியம் வழக்கம்போல் ரன் மழை பொழிவதாகத்தானே இருக்கும். இந்த உலகக் கோப்பையில் இங்கு நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இரு அணிகளுமே 300 ரன்களைக் கடந்தன. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து சொதப்பியதால் பெரிய ஸ்கோர் எடுக்கப்படவில்லை. நிச்சயம் இந்தப் போட்டியில் பெரிய ஸ்கோர் எடுக்கப்படும். ஆனால் இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வெள்ளிக் கிழமை மழை இங்கு பயங்கரமாகக் கொட்டியது. அதனால் ஆடுகளம் மூடப்பட்டிருந்தது. சனிக்கிழமையும் மழை வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. மழை வந்தால் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு குறைந்துவிடும்.

காயங்களால் அவதிப்படும் நியூசிலாந்து அணி

நியூசிலாந்து அணி தொடர்ந்து முக்கிய வீரர்களின் காயத்தால் அவதிப்பட்டுவருகிறது. தொடரின் தொடக்க போட்டிகளை காயத்தால் தவறவிட்ட வில்லியம்சன், விளையாடிய முதல் போட்டியிலேயே மீண்டும் காயமடைந்தார். சௌத்தி, லாகி ஃபெர்குசன் ஆகியோரும் முழுமையாக ஃபிட்டாக இருக்கவில்லை. இந்நிலையில் கடந்த போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றி, ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களுள் ஹென்றி இப்போது தொடரிலிருந்தே வெளியேறியிருக்கிறார். அவருக்குப் பதில் கைல் ஜேமீசன் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த சிக்கல்களுக்கு மத்தியில் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் அனைத்துமே வலுவிழந்துகொண்டிருக்கிறது. ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கிளென் ஃபிலிப்ஸ் மட்டுமே பேட்டிங்கில் கொஞ்சம் சுமாராக செயல்படுகிறார்கள். பந்துவீச்சிலும் விக்கெட் எடுத்தவர்களெல்லாம் கடந்த சில போட்டிகளாக தடுமாறுகிறார்கள். குறைந்தபட்சம் ஓரிருவராவது இரு துறைகளிலும் பெரிய பங்களிப்பைக் கொடுக்கவேண்டும்.

வெற்றிப் பயணத்தைத் தொடங்குமா பாகிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான வெற்றி பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை கொடுக்கவேண்டும். கடந்த போட்டியில் அவர்களது வேகப்பந்துவீச்சு யூனிட் முதல் முறையாக முழு ஆதிக்கம் செலுத்தியது. அந்த சந்தோஷம் மட்டுமல்லாமல், இரண்டு ஓப்பனர்களும் அரைசதம் கடந்த சந்தோஷமும் அந்த அணிக்கு சேர்ந்து கொண்டது. சுழற்பந்துவீச்சு மட்டும் கொஞ்சம் தடுமாறுகிறது. அதுவும் கிளிக் ஆனால் நிச்சயம் பாகிஸ்தான் அணி அவர்களின் சிறந்த செயல்பாட்டை காட்ட முடியும்.

கவனிக்கவேண்டிய வீரர்கள்


நியூசிலாந்து - டேரில் மிட்செல்: அந்த அணியின் சீனியர் பேட்ஸ்மேன்கள் பலரும் தடுமாற, இவர் தான் அந்த மிடில் ஆர்டரில் ஓரளவு நம்பிக்கை கொடுக்கிறார்.

பாகிஸ்தான் - ஷஹீன் அஃப்ரிடி: நம்பிக்கை குறைவாக இருக்கும் நியூசிலாந்து அணியை, ஃபார்முக்கு திரும்பியிருக்கும் ஷஹீன் ஆட்டிப் படைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com