டெல்லி அணியிலிருந்து உத்தரப்பிரதேச மாநில அணிக்கு மாறும் கொல்கத்தா ஐபிஎல் கேப்டன்! இதுதான் காரணமா?

டெல்லி மாநில அணியின் கேப்டனாக இருந்த நிதீஷ் ராணா, தற்போது அந்த அணியில் இருந்து விலகி, உத்தரப் பிரதேச அணியில் விளையாட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
nitish rana
nitish ranatwitter

ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற நிதீஷ் ராணா, அந்த அணியைச் சிறப்பான இடத்துக்குக் கொண்டு சென்றார். ஐபிஎல் தொடரில் இவர் கொல்கத்தா அணிக்காக கேப்டன்சி செய்வதற்கு முன்பாகவே, டெல்லி மாநில அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் கேப்டனாகச் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், சில வாரங்களுக்குமுன் டெல்லி அணியின் ஒயிட் பால் கிரிக்கெட் கேப்டனாக யாஷ் துல் நியமனம் செய்யப்பட்டார். இதனால் கேப்டனாக விளையாடி வந்த நிதிஷ் ராணா, வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்தார்.

இருப்பினும் டெல்லி அணியின் சில வீரர்களுடன் நிதிஷ் ராணாவுக்கு ஏற்கெனவே பிரச்னை இருந்ததகாவும் கூறப்படுகிறது. இதனால் உள்ளூர் கிரிக்கெட்டில் வேறு அணிக்காக களமிறங்க நிதீஷ் ராணா ஆலோசித்து வந்தார். டெல்லி அணியின் முக்கிய வீரரான நிதிஷ் ராணா, திடீரென விலகுவதாக எடுத்த முடிவு அம்மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மத்தியில், நிதிஷ் ராணாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு முன்பாகவே, டெல்லி அணியைவிட்டு வெளியேறுவதற்காக நடைமுறைகளை நிதீஷ் ராணா தொடங்கி இருந்தார். இதன் முதற்கட்டமாக, டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லா சான்றிதழைப் பெற விண்ணப்பித்திருந்தார்.

அந்தச் சான்றிதழ் தற்போது நிதீஷ் ராணாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து விரைவில் அவர் உத்தரப் பிரதேச அணியில் இணைவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடிவரும் ரிங்கு சிங், உத்தரப் பிரதேச மாநில அணியில் இருக்கிறார். இவர் மூலமாகவே நிதீஷ் ராணாவும் உத்தரப் பிரதேச அணிக்கு மாற இருப்பதாகக் கூறப்படுகிறது.

nitish rana
“தோற்றாலும் நீ சிங்கம்தான்” - விடாமுயற்சியில் கெத்து காட்டும் ரிங்கு சிங்!

உத்தரப் பிரதேச அணியின் மிடில் ஆர்டர் ரிங்கு சிங்கை மட்டுமே நம்பி இருக்கும் சூழலில், நிதீஷ் ராணாவின் வருகை அந்த அணிக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் என்று பார்க்கப்படுகிறது. அவரோடு சேர்த்து டெல்லி அணிக்காக கடந்த ரஞ்சி டிராபியில் அதிக ரன் குவித்த துருவ் ஷோரேவும் டெல்லி அணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரும், டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லாச் சான்றிதழைப் பெற விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com