மரண அடி.. இந்தியாவின் பந்துவீச்சை சிதறடித்த நியூசிலாந்து.. 259 ரன்கள் குவிப்பு!
நியூசிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சிதறடித்து 259 ரன்கள் என்ற இமாலய டோட்டலை பதிவு செய்தது. கிளென் பிலிப்ஸ் 107 ரன்கள் அடித்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியா 260 ரன்கள் இலக்கை துரத்தி 89 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் உள்ளது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் 3 போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி மூன்றிலும் வென்று தொடரை கைப்பற்றியது.
இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் நடைபெற்றது. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 5 ரன்னுக்கு 1 விக்கெட், 34 ரன்னுக்கு 2 விக்கெட் என சுமாராகவே தொடங்கியது. ஆனால் நல்ல ஃபார்மில் இருந்துவரும் கிளென் பிலிப்ஸ் 4வது வீரராக களமிறங்கி சரவெடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
49 பந்தில் 10 சிக்சர்கள் 6 பவுண்டரிகளை பறக்கவிட்ட பிலிப்ஸ் 107 ரன்கள் அடித்து இந்தியாவின் பந்துவீச்சை சிதறடித்தார். தொடர்ந்து வந்த மைக்கேல் பிரேஸ்வெல்லும் 25 பந்தில் 6 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என வெளுத்துவாங்க 20 ஓவர் முடிவில் 259 ரன்கள் என்ற இமாலய டோட்டலை பதிவுசெய்தது நியூசிலாந்து. கடந்த 3 போட்டிகளில் ஏற்பட்ட படுதோல்விக்கு பதிலடி கொடுத்தது.
இந்தியாவிற்கு எதிராக ஒரு அணி பதிவுசெய்த அதிகபட்ச டி20 டோட்டல் இதுவாகும். அதேபோல நிதிஷ் குமார் ரெட்டி அதிகபட்சமாக 4 ஓவரில் 64 ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான பட்டியலில் இணைந்தார்.
260 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திவரும் இந்தியா 89 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது.

