இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நீயூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 26-ம் தேதி தொடங்கியது. முதலில் விளையாடிய இலங்கை அணியில் சண்டிமால் 116 ரன்கள், கமிந்து மெண்டீஸ் 182* ரன்கள் மற்றும் குசால் மெண்டீஸ் 106* ரன்கள் என மூன்றுபேர் சதமடித்து அசத்த 5 விக்கெட்டுக்கு 602 ரன்களை குவித்த இலங்கை அணி டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணிக்கு, சுழற்பந்துவீச்சில் திணறடித்த பிரபாத் ஜெயசூர்யா விக்கெட் வேட்டை நடத்தினார். 18 ஓவர்களை வீசி 6 ஓவர் மெய்டன்களுடன் 6 விக்கெட்டை வீழ்த்திய பிரபாத், நியூசிலாந்து அணியை 88 ரன்னுக்குள் ஆல்அவுட்டாக்கினார்.
நியூசிலாந்து 88 ரன்களுக்கு ஆல்அவுட்டான நிலையில், தொடர்ந்து விளையாடுமாறு இலங்கை அணி கேட்டுக்கொண்டது. follow-on மூலம் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் நியூசிலாந்து அணி 199 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளுடன் விளையாடி வருகிறது.
நிஷான் பீரிஸ் 3 விக்கெட்டுகள் மற்றும் பிரபாத் ஜெயசூர்யா, டி சில்வா தலா ஒருவிக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். டாம் பிளண்டல் 47 ரன்கள் மற்றும் க்ளென் பிலிப்ஸ் 32 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.