10வருட போராட்டம்! 2024 டி20 உலகக்கோப்பைக்கு தகுதிபெற்ற நேபாள்! பல்லாயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள்!

2024 டி20 உலகக்கோப்பையின் தகுதிச்சுற்று அரையிறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற நேபாள அணி, 10 வருடங்களுக்கு பிறகு தகுதிபெற்று அசத்தியுள்ளது.
நேபாள கிரிக்கெட் அணி
நேபாள கிரிக்கெட் அணிTwitter

2024 டி20 உலகக்கோப்பையானது அடுத்தாண்டு ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. முதல்முறையாக மொத்தம் 20 அணிகள் 2024 டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கவுள்ளன. 20 அணிகளும் 5 பிரிவுகளாக நான்கு-நான்கு அணிகளாக பிரிந்து பலப்பரீட்சை நடத்தும். மொத்தம் 55 போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை சேர்த்து இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து முதலிய 12 அணிகள் ஏற்கெனவே தங்களது இடத்தை சீல் செய்துள்ளன. இந்நிலையில் மீதமிருக்கும் 8 இடங்களுக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் பல்வேறு நாடுகள் மோதி வருகின்றன.

2014-க்கு பிறகு 2024-டி20 உலகக்கோப்பைக்கு திரும்பும் நேபாள்!

ஆசிய அணிகளுக்கு இடையேயான 2024 டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் நேபாளத்தில் நடைபெற்றுவந்தன. "ஓமன், நேபாள், மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன், ஹாங்காங், குவைத் "முதலிய 8 ஆசிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஓமன், பஹ்ரைன், நேபாள், ஐக்கிய அரபு நாடுகள் முதலிய 4 அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றன.

nepal
nepal

ஒரு அரையிறுதியில் பஹ்ரைன் மற்றும் ஓமன் அணிகளும், மற்றொரு அரையிறுதியில் நேபாள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளும் மோதின. இந்த போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் 2024 டி20 உலகக்கோப்பைக்கு தகுதிபெறும் என்பதால் போட்டி விறுவிறுப்பாகவே நடைபெற்றது. முதல் அரையிறுதிப்போட்டியில் 106 ரன்கள் அடித்திருந்த பஹ்ரைன் அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓமனிடம் படுதோல்வியடைந்தது.

இந்நிலையில் இரண்டாவது அரையிறுதிப்போட்டியானது நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கும், நேபாள் அணிக்கும் இடையே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 134 ரன்கள் அடித்தது. 135 ரன்கள் என்ற டிரிக்கியான இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாள் அணி விரைவாகவே இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

nepal
nepal

ஆனால் அதற்கு பிறகு கைகோர்த்த ஆசிஃப் மற்றும் கேப்டன் ரோஹித் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் ரோகித் சிக்சர் பவுண்டரிகளாக அடிக்க, நிதானமாக விளையாடிய ஆசிஃப் அரைசதம் அடித்து அசத்தினார். கடைசிவரை சென்ற போட்டியில் நேபாள அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது. இந்த வெற்றிகள் மூலம் ஓமன் மற்றும் நேபாள அணிகள் 2024 டி20 உலகக்கோப்பைக்கு தகுதிபெற்றுள்ளன.

மைதானத்தை தாண்டி மரம், கட்டிடத்தில் சூழ்ந்த ரசிகர்கள்!

2014-க்கு பின் 10 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக்கோப்பைக்கு தகுதிபெறும் நேபாளத்தின் வெற்றியை பார்ப்பதற்கு, போட்டி நடைபெற்ற முல்பானி மைதானத்தில் பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

13,000 இருக்கைகள் கொண்ட முல்பானி மைதானம் நிரம்பிவழிந்தாலும், நேபாளத்திற்கு ஆதரவளிக்க திரண்ட ரசிகர்கள் பக்கத்தில் இருந்த மரங்கள், கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் மீது ஏறி ஆரவாரம் செய்தனர்.

நேபாளம் அரையிறுதியில் வெற்றிபெற்றபிறகு அதை நேபாள ரசிகர்கள் கொண்டாடியவிதம், கிரிக்கெட்டை எந்தளவு நேசிக்கும் ரசிகர்களை நேபாளம் கொண்டுள்ளது என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com