‘ஏற்கனவே சக வீரரை இழந்துள்ளேன்; பீட்டர்சன் பேசியது மோசமானது’- அரங்கம் அதிர வலியோடு பேட் செய்த லயன்!

இரண்டாவது இன்னிங்சில் காயம் காரணமாக கேப்டன் கம்மின்ஸ் பேட் செய்ய வர வேண்டாம் என்று வலியுறுத்தியும், அணிக்கு தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என விரும்பிய நாதன் லயன் காயத்துடன் பேட் செய்தார்.
நாதன் லயன்
நாதன் லயன் ட்விட்டர்

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் போட்டியில், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கு வலது காலின் பின்புறம் பகுதியில் காயம் ஏற்பட்டது. கேட்ச் பிடிக்க ஓடியபோது தசைப்பிடிப்பு போன்று இருந்த நிலையில், காயம் காரணமாக அவர் மைதானத்தை விட்டு நடக்க முடியாமல் மருத்துவர் உதவியுடன் வெளியேறினார்.

பின்னர் பவுலிங் செய்ய வராத நிலையில் ஊன்றுகோல் உதவியோடு நாதன் லயன் நடந்துவரும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. முதல் இன்னிங்சில் 13 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் எடுத்திருந்தார் நாதன் லயன். மேலும், இரண்டாவது இன்னிங்சில் காயம் காரணமாக கேப்டன் கம்மின்ஸ் பேட் செய்ய வர வேண்டாம் என்று வலியுறுத்தியும், அணிக்கு தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என விரும்பிய நாதன் லயன் காயத்துடன் பேட் செய்தார். ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அதாவது ஹசல்வுட் அவுட்டனாதும் 10-வது வீரராக நடக்க முடியாமல் தாங்கி, தாங்கி மைதானத்திற்கு நடந்து வந்தார் நாதன் லயன். அவரின் இந்த அர்ப்பணிப்பைக் கண்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர்.

13 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் நாதன் லயன். அவர் பேட் செய்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதலாக 15 ரன்கள் கிடைத்தது. 279 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 370 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கியது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்தது. சிறு காயம் என்றாலே, மைதானத்தை விட்டு வெளியேறி கிரிக்கெட் வீரர்கள் அணிக்கு திரும்பி வராத நிலையில் நாதன் லயனின் இந்த செயல் பாராட்டுகளைப் பெற்றது.

இதுகுறித்து அவர் சென் ரேடியோவிற்கு தெரிவிக்கையில், “உண்மையில் கம்மின்ஸ் என்னிடம் இரண்டாவது இன்னிங்ஸில் நீங்கள் பேட் செய்ய வேண்டாம் என்றுக் கூறினார். ஆனால், நான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டோனால்டு மற்றும் எங்களது மருத்துவக் குழுவிடம் பேசி, நான் பேட் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். நான் அதிகமாக பிசியோ அறையில் நேரம் செலவிட்டு எப்படி பேட் செய்யலாம் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.

அதன்பிறகு, இரண்டாவது இன்னிங்சில் அணிக்கு எனது பங்களிப்பை வழங்குவதற்காக பேட் செய்வதற்கு களமிறங்கினேன். எனது அணிக்கு ஆதரவு கொடுப்பதற்கு நான் மருத்துவக் குழுவோடு செலவிட்ட நேரம் இரண்டாவது இன்னிங்சில் என்னை 13 பந்துகள் வரை தாக்குப் பிடிக்க உதவி செய்தது. நான் பேட் செய்வது குறித்து நிறைய பேச்சுகள் இருந்தன.

எனினும், அணிக்கு எனது பங்களிப்பை வழங்கி என் அணி வீரர்களுக்கு உதவிட களமிறங்கினேன். ஆட்டத்தின் கடைசி நாளும் இதனை செய்வேன். காயம் காரணத்தினால் கடந்த இரண்டு நாள்களாக மன வேதனையிலும், இதயம் நொறுங்கியது போன்று உள்ளேன். ஆஷஸ் தொடரை இங்கு வெல்ல வேண்டும் என்ற கனவு எனக்கு இருக்கிறது. அதனை நான் பலமுறை பொதுவெளியிலும், தனிப்பட்ட முறையிலும் கூறியிருக்கிறேன். ஆனால், இந்த காயம் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் தந்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் வலியோடு நாதன் லயன் பேட்டிங் செய்ய வந்தபோது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் வர்ணனையில் “இப்பொழுது நாதன் லயனுக்கு தலையில் அடிபட்டு (மூளையதிர்ச்சி அடைந்து), அவருக்கு பதிலாக இந்தியாவில் அந்நாட்டு அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக சுழற் பந்துவீச்சில் செயல்பட்டு இருந்த டாட் முர்பி மாற்று வீரராக (concussion substitute) வருவதாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்துப் பாருங்கள். நாதன் லயனுக்கு பதிலாக வேறு ஒரு சுழற் பந்துவீச்சாளரை களம் இறக்கலாம் என்று ஆஸ்திரேலியா இப்படி ஒரு முடிவை, அதாவது அந்த அணியின் பின்னணியில் இப்படி செய்திருக்கலாம்” தெரிவித்திருந்தார்.

Netizens React on Kevin Comments
Netizens React on Kevin Comments

இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் இதுகுறித்து நாதன் லயனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “நான் தலையில் அடிபடுவதற்காக களத்திற்கு சென்றேன் என்பதான கருத்துக்களை கேள்விப்பட்டேன். ஆனால் நான் உண்மையில் அதற்கு எதிரானவன். ஏனெனில், தலையில் அடிபட்ட காரணத்தால், நான் எனது சக ஆட்டக்காரரை (Phillip Hughes) இழந்திருக்கிறேன். உண்மையில் இது மிக மோசமான கருத்து என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நாதன் லயனுக்கு இந்த டெஸ்ட், அவர் தொடர்ச்சியாக விளையாடும் 100-வது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com