தொடர்ச்சியாக 3 சதங்கள் விளாசல்.. இங்கிலாந்து மண்ணில் அசத்திய முஷீர் கான்!
கடந்தாண்டு கார் விபத்தில் சிக்கி கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சையில் இருந்த முஷீர் கான், 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கம்பேக் கொடுத்தார். அங்கு இறுதிப்போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்த முஷீர் கான், இம்பேக்ட் பிளேயராக சோபிக்கத்தவறினார்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் மும்பை எமர்ஜிங் அணியில் இடம்பெற்றுள்ள முஷீர் கான் தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்து அசத்தியுள்ளார்.
தொடர்ச்சியாக 3 சதங்கள் விளாசல்..
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மும்பை எமர்ஜிங் அணியில் இடம்பெற்றிருக்கும் முஷீர் கான், சேலஞ்சர்ஸ், நாட்டிங்ஹாம்ஷையரின் இரண்டாவது லெவன், லௌபரோ UCCE முதலிய 3 வெவ்வேறு அணிகளுக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்து அசத்தினார்.
அதுமட்டுமில்லாமல் மூன்று போட்டியிலும் ஸ்பின்னராக விக்கெட் வேட்டை நடத்திய முஷீர் கான் 15 விக்கெட்டுகளுக்கும் மேலாக வீழ்த்தி அசத்தியுள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முஷீர் கானுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.