”அவரொன்றும் ஹர்திக் பாண்டியா இல்லை.. ஆஸி. மண்ணில் ஜொலிக்க முடியாது!” - எம்எஸ்கே பிரசாத் கவலை!
இந்திய அணியில் பேட்டிங் ஆல்ரவுண்டர்களுக்கான தேவை என்பது அத்தியாவசியமாக இருந்துவருகிறது. பேட்டிங் ஆல்ரவுண்டர்கள் இல்லாத குறையை இந்திய கிரிக்கெட்டின் பஞ்சம் என்றேகூட சொல்லிவிடலாம். இப்படியான இந்திய அணியின் பெரிய பற்றாக்குறைக்கு சரியான கண்டுபிடிப்பாக வந்தவர் தான் ஹர்திக் பாண்டியா. தோனியின் அணியில் பிரதான வீரராக ஜொலித்த ஹர்திக் பாண்டியா, விராட் கோலியின் அணியிலும் முக்கியமான வீரராகவே பார்க்கப்பட்டார்.
ஆனால், தற்போது இந்திய அணியின் மூன்று வடிவத்திலும் விளையாட வேண்டிய ஒரு வீரர், எதற்காக டி20 வடிவத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளார் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
சமீபத்திய அணியின் தேர்வு முடிவுகள் பாரபட்சமாகவே இருந்துவருகிறது, இந்தியாவிற்காக சிறப்பாக செயல்பட்டுள்ள அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் அணியில் சேர்க்கப்படாமல், வாசிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி போன்ற வீரர்கள் வாய்ப்புகளை பெற்றுவருகின்றனர்.
அந்தவகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிரோபிக்கு பேட்டிங் ஆல்ரவுண்டராக நிதிஷ் குமார் ரெட்டி தேர்ந்தெடுக்கபட்டிருப்பது முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்தை கவலையடைய செய்துள்ளது.
அவர் ஒன்றும் ஹர்திக் பாண்டியா கிடையாது..
நிதிஷ் குமார் ரெட்டியின் தேர்வு குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், ”ஆஸ்திரேலியாவில் நிதிஷ் குமார் ரெட்டி அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கிறேன். அதனாலேயே அவருக்கு சமீபத்தில் இந்திய நிர்வாகம் வாய்ப்பு கொடுத்துள்ளது. அவரால் ஹர்திக் பாண்டியா போல 8–10 ஓவர்கள் வீசமுடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
ஆனால் அவர் 140 வேகத்தில் வீசக்கூடிய ஹர்திக் பாண்டியா கிடையாது. அவர் 125 – 130 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசுகிறார். அது போக உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட அவர் போதுமான அளவு விளையாடவில்லை என்பது கவலைக்குரிய விஷயம். உள்ளூரில் அவர் 25 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். அப்படிப்பட்ட அனுபவமற்ற அவரை ஹர்திக் பாண்டியா இடத்தில் விளையாட தேர்ந்தெடுத்துள்ளது எனக்கு கவலையளிக்கிறது” என்று பேசியுள்ளார்.