அணியை மீட்டெடுக்க தோனியின் வியூகம்..கோப்பையை கொண்டு வருமா புதிய யுக்தி??
கடந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்ததிலிருந்தே, அடுத்த சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தயார்படுத்துவதில் தோனி முக்கியப் பங்காற்றி வருகிறார். இனி புதிய தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கானுடன் பொறுப்புகளை அவர் எப்படிப் பகிர்ந்துகொள்ளப் போகிறார் என்பது சுவாரசியமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஃபினிஷர் தோனிக்கு, 2023 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஜடேஜா அடித்த அந்த வெற்றி ரன்களே கச்சிதமான விடைபெறுதலாக அமைந்திருக்கும். ஆனால், அதன்பிறகு மூன்று சுமாரான சீசன்களைக் கடந்து, 45 வயதில் சிஎஸ்கே வீரராக தனது பொற்காலப் பயணத்துக்கு இப்போது அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தல தோனி.
கடந்த சில சீசன்களாக வயது மூப்பால் தோனியின் அதிரடி குறைந்திருந்தாலும், சேப்பாக்கம் ரசிகர்களுக்கு அது ஒரு பொருட்டாகவே இல்லை. தோல்வியின் விளிம்பிலும் தோனியை ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா, அவர் அடிக்கும் ஒற்றை சிக்ஸரையாவது ரசித்துவிட மாட்டோமா என்ற பழைய நினைவுகளிலேயே ரசிகர்கள் மூழ்கியிருந்தனர். ஆனால், ஸ்டீபன் பிளெமிங் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் விலகிய பிறகு, ஏல மேஜையிலும் களத்திலும் சிஎஸ்கே தடுமாறத் தொடங்கியது.
சேப்பாக்கத்தின் விசில் சத்தங்கள் அடங்கி, ரசிகர்களின் ஏமாற்றம் கோபமாக மாறியது. இப்போது சிஎஸ்கேவுக்கு பேட்ஸ்மேன் தோனியை விட, வழிகாட்டி தோனியின் தேவையே அதிகம் உள்ளது. அணியின் பழைய பொற்காலத்தை மீட்டெடுக்க 2026 ஐபிஎல் முடிந்தவுடனேயே தோனி தனது வியூகங்களைத் தொடங்கிவிட்டார்.
ஜாகீர் கானைப் புதிய தலைமைப் பயிற்சியாளராகக் கொண்டுவந்தது முதல், மற்ற அணிகள் குறிவைத்த ஷிவம் துபேயைத் தக்கவைத்தது வரை தோனி காய்களை நகர்த்தி வருகிறார். இனி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜாகீர் கானுடன் இணைந்து, அணியை மீண்டும் கட்டமைக்கும் மாபெரும் பொறுப்பு தோனியின் தோள்களில் விழுந்துள்ளது. சேப்பாக்கத்தில் மீண்டும் விசில் சத்தம் விண்ணைப் பிளக்குமா? தோனி-ஜாகீர் கூட்டணி சிஎஸ்கேவை மீண்டும் அரியணையில் ஏற்றுமா? வரும் சீசனில் பார்ப்போம்...

