
சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தரவரிசைப் பட்டியலில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதேநேரத்தில், இந்தோனேசியா, மங்கோலியா, மலேசியா, ஹாங்காங் அணிகள் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இன்று, நடைபெற்ற டி20 போட்டியில் இந்தோனேசியா – மங்கோலியா மகளிர் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற மங்கோலியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய இந்தோனேசியா அணியின் தொடக்க வீராங்கனைகள் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். நி புடு அயு நந்தா சக்ரினி 31 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அதுபோல் மற்றொரு தொடக்க பேட்டரான நி லுக் டெவி 48 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். அடுத்து இறங்கிய் மரியாவும் 27 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார். இதனால் அந்த அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதில் மங்கோலிய அணி 49 ரன்களை எக்ஸ்ட்ராகவும் வழங்கியிருந்தது.
பின்னர் கடுமையான இலக்குடன் களமிறங்கிய மங்கோலிய மகளிர் அணி, இந்தோனேசிய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 10 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 15 ரன்களில் சுருண்டது. இதில் பத்ஜ்ரகல் மட்டும் 19 பந்துகளை எதிர்கொண்டு, அதிகபட்சமாக 5 ரன்கள் எடுத்தார். இவரைத் தொடர்ந்து பாட்சோக்ட் நரேஞ்சல் 3 ரன்கள் எடுத்தார். இன்னொரு வீராங்கனையான நாமுனுல் 1 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். மற்ற 7 வீராங்கனைகளும் டக் அவுட் முறையில் விக்கெட்டை இழந்திருந்தனர். இந்தோனேசியா அணியில் ஆண்ட்ரியானி சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, இந்தோனேசிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.