T20 WC| ஹர்ஷித் ராணா அதிகாரப்பூர்வமாக விலகல்.. அணியில் இணையும் முகமது சிராஜ்!
2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இந்தியா முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டு விளையாடவுள்ளது. இந்தியா 3வது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது நாளை முதல் தொடங்கி மார்ச் 8ஆம் தேதிவரை நடக்கவிருக்கிறது. 20 அணிகள் ஒரு கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ள நிலையில், நடப்பு சாம்பியனாக இந்திய அணி களம்காண்கிறது.
இதுவரை அதிகபட்சமாக 2 உலகக்கோப்பைகளை வென்றிருக்கும் அணிகளாக வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் நீடிக்கும் நிலையில், 3வது கோப்பையை இந்தியா வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
மேலும் எந்த ஒரு அணியும் தொடர்ந்து இரண்டு கோப்பைகளை வென்றதில்லை என்ற சூழலில் இந்தியா புதிய வரலாற்றை நோக்கி விளையாடவிருக்கிறது.
இந்நிலையில் தொடர்ந்து அணியில் சிறப்பாக விளையாடிவரும் ஹர்சித் ராணா காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலகியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பிசிசிஐ.
முகமது சிராஜ் அணியில் சேர்ப்பு..
2026 டி20 உலகக்கோப்பையில் நாளை நடக்கவிருக்கும் முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டு விளையாடவிருக்கிறது இந்திய அணி. இந்தசூழலில் போட்டிக்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடிய போது, வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரால் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பது கடினம் என்றும் தகவல் வெளியானது.
இந்தசூழலில் அதனை உறுதிசெய்திருக்கும் பிசிசிஐ, ஹர்சித் ராணா உலகக்கோப்பையிலிருந்து விலகுவதாகவும், அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் இணைவார் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அப்டேட் செய்யப்பட்ட இந்தியா அணி: சூர்யகுமார் யாதவ் (C), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (WK), இஷான் கிஷன் (WK), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல் (VC), ரின்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ்.

