“இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது..” - மீண்டும் மீண்டும் சீண்டும் பாகிஸ்தான் வீரர்
முன்னாள் பாகிஸ்தான் பவுலர், இந்தியா 2026 டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு செல்லாது என மீண்டும் கருத்து தெரிவித்தார். இந்திய வீரர் அபிஷேக் சர்மாவை விமர்சித்த அவர், இந்திய அணியின் பேட்டிங் வரிசை பல ஆட்டங்களில் சரிந்தது எனவும், இந்தியாவை விட தென்னாப்பிரிக்கா சிறந்த அணியாக இருப்பதாகவும் கூறினார்.
2026 டி20 உலகக்கோப்பையை வெல்லக்கூடிய அணியாக இந்தியாவை பல்வேறு முன்னாள் வீரர்கள் கணித்திருக்கும் நிலையில், இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தாலும் அரையிறுதிக்கு முன்னேறாது என்ற கருத்தை தெரிவித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் பவுலர் முகமது அமீர்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடங்கியதிலிருந்து முகமது அமீர் இந்திய வீரர்கள் குறித்தும், இந்திய அணி குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்திய வீரர் அபிஷேக் சர்மாவை வெறும் பந்தை பார்த்து சுற்றக்கூடிய சாதாரண வீரர் என அமீர் விமர்சித்திருந்த நிலையில், அவரின் கருத்திற்கேற்ப தொடர்ந்து 3 முறை டக் அவுட்டாகியுள்ளார் அபிஷேக் சர்மா.
இந்தசூழலில் தற்போது இந்தியா அரையிறுதிக்கு தகுதிபெறாது என்ற கருத்தை மீண்டும் மீண்டும் பதிவுசெய்துள்ளார் முகமது அமீர்.
இந்தியா தகுதிபெறாது..
அபிஷேக் சர்மா குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ள முகமது அமீர், "அபிஷேக் சர்மாவை பொறுத்தவரை, அவரிடம் தற்காப்பு ஆட்டம் இல்லை என்றுதான் நான் சொன்னேன். பந்தை நிறுத்த முடியாத ஒரு வீரர் அவர். அவரை ஸ்லாக்கர் என்று அழைக்காமல் வேறு என்னவென்று அழைப்பது?" என மீண்டும் விமர்சித்தார்.
மேலும், பாகிஸ்தான் போட்டியைத் தவிர, ஒவ்வொரு ஆட்டத்திலும் இந்திய அணியின் பேட்டிங் வரிசை சரிந்தது. தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடும் விதத்தைப் பார்த்தால், அவர்கள் எந்த அணியையும் வெல்ல முடியும் என எனக்கு தோன்றுகிறது என்ற கருத்தை தெரிவித்திருந்த அமீர், தற்போது “இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் கிரிக்கெட் விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது. தென்னாப்பிரிக்கா சிறந்ததாக இருப்பதாக நான் நினைக்கிறேன், நான் என்னுடைய உணர்விலிருந்து பேசுகிறேன் என கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய கருத்தை விமர்சித்திருக்கும் முன்னாள் இந்திய வீரர்களுக்கு பதிலளித்திருக்கும் அமீர், தனது விமர்சனம் கிரிக்கெட் மதிப்பீட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும், அவமரியாதை அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

