“திறமைக்கு முன் எவ்வளவு பெரிய சவாலும் தூசுதான்..” பார்வையற்ற மகளிர் அணியை பாராட்டிய மிதாலி!
பார்வையற்ற இந்திய மகளிர் அணியின் முதல் டி20 உலகக்கோப்பை வெற்றியை முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் பாராட்டியுள்ளார். இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, இறுதியில் நேபாளை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்தது. மிதாலி, திறமைக்கு முன் சவால்கள் தூசு என பாராட்டியுள்ளார்.
விழிச்சவால் உடைய பெண்கள் கலந்துகொள்ளும் முதல் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை டெல்லி மற்றும் இலங்கையின் கொழும்புவில் நடைபெற்றது.
லீக் போட்டிகளில் நம்பமுடியாத திறமையை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி, இலங்கை மற்றும் அமெரிக்காவை 10 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 209 ரன்கள் வித்தியாசத்திலும், நேபாளத்தை 85 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது..
இந்நிலையில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய மகளிர் அணி, இறுதிப்போட்டியில் நேபாளை எதிர்கொண்டது..
முதல் டி20 உலகக்கோப்பையை வெல்லப்போவது யார், முதல் உலகச் சாம்பியனாக யார் மாறப்போகிறார்கள் என்ற போட்டியில், முதலில் விளையாடிய நேபாள அணி 20 ஓவரில் 114 ரன்கள் சேர்த்தது..
தொடர்ந்து விளையாடிய இந்திய மகளிர் அணி 12.1 ஓவரிலேயே இலக்கை எட்டிப்பிடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றியை பதிவுசெய்தது. 47 பந்துகளை வெளியில் வைத்துமுடித்த இந்திய மகளிர் அணி, பார்வையற்றோருக்கான முதல் டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது.. கோப்பை வென்ற தருணத்தின்போது கண்ணீர்விட்ட பார்வைகுறைபாடு உடைய இந்திய மகளிர் வீரர்களை பார்க்கும்போது ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகருக்கும் உணர்ச்சிமிக்க தருணமாகவே இருந்தது..
இந்நிலையில் உலகக்கோப்பை வென்ற பார்வை குறைபாடு உடைய இந்திய மகளிர் அணி வீரர்களுக்கும், இந்திய அணிக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ். சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ”திறமை வரம்புக்குள் அடைபட மறுக்கும்போது எவ்வளவு பெரிய சவாலாக இருந்தாலும் அது சிறியது தான்.. பார்வையற்ற இந்திய மகளிர் அணி ஓவ்வொரு தடையையும் பலமாகவும், ஒவ்வொரு சந்தேகத்தையும் உறுதியாகவும் மாற்றினார்கள்” என்று பாராட்டியுள்ளார்..

