”கோலி சுயநலமா விளையாடுறார்” - விமர்சித்த முன்னாள் பாக். வீரர்! Thug Reply கொடுத்த மைக்கேல் வாகன்!

நடப்பு உலகக்கோப்பையில் விராட் கோலி தன்னுடைய சொந்த சாதனைகளுக்காக மட்டுமே விளையாடுவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் விமர்சித்துள்ளார்.
விராட் கோலி
விராட் கோலிweb

நடப்பு 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கி வரும் இந்திய அணி, இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் அனைத்திலும் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை இந்திய பேட்ஸ்மேன்களிடம் இருந்து 3 சதங்களும், 11 அரைசதங்களும் வந்திருக்கும் நிலையில், இந்திய பவுலர்களிடம் இருந்து 57 விக்கெட்டுகள் வந்துள்ளன. இரண்டு பக்கமும் தரமான கிரிக்கெட்டை விளையாடிவரும் இந்திய அணி அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்பனமாக இருந்துவருகிறது.

"ரோகித்தை போல் இல்லை, கோலி சுயநலமாக ஆடுகிறார்!"

நடப்பு உலகக்கோப்பையில் 2 முறை சதங்களும், 4 முறை அரைசதங்களும் அடித்திருக்கும் விராட் கோலி 543 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஈடன் கார்டனில் 49வது ஒருநாள் சதத்தை எடுத்த விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவரான சச்சின் டெண்டுல்கரின் உலகசாதனையை சமன் செய்து அசத்தினார். அந்த போட்டியில் விராட் கோலி 121 பந்துகளில் 101 ரன்கள் அடித்திருந்த நிலையில், அதிக பந்துகள் எடுத்துக்கொண்ட அவரின் ஆட்டம் சிலரால் விமர்சனத்திற்குள்ளானது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான விராட் கோலியின் ஆட்டம் குறித்து விமர்சித்திருக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹஃபீஸ், “விராட் கோலி பேட்டிங்கில் நான் சுயநல உணர்வைக் கண்டேன். இந்த உலகக் கோப்பையில் மூன்றாவது முறையாக இதைக்காண்கிறேன். 49வது ஓவரில் அவர் முதலில் அணிக்காக விளையாடாமல், தனது சொந்த சதத்தை எட்டுவதற்காக சிங்கிள் எடுத்தார். ஆனால் ரோஹித் சர்மா அப்படி இல்லை. அவர் சுயநலமாக விளையாடாமல் அணிக்காக மட்டுமே விளையாடுகிறார் “ என விமர்சித்திருந்தார் முகமது ஹஃபீஸ்.

இந்த கருத்து முட்டாள்தனமானது!- ஹஃபீஸ் கருத்துக்கு மைக்கேல் வாகன் பதில்

முகமது ஹஃபீஸ் கூறிய கருத்துக்கு பதிலளித்திருக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், இது மிகவும் முட்டாள்தனமான கருத்து என விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் வாகன், “இதை பாருங்கள் முகமது ஹஃபீஸ், இந்திய அணி சிறப்பாக விளையாடி 8 அணிகளை வீழ்த்தியுள்ளது. அற்புதமாக விளையாடிவரும் விராட் கோலி இப்போது 49 சதங்களை பதிவுசெய்துள்ளார். கோலி விளையாடிய கடைசி ஆட்டமானது ஒரு தந்திரமான ஆடுகளத்தில் ஆங்கர் ரோல் இன்னிங்ஸ் ஆகும். அந்த போட்டியில் அவருடைய அணி 200 ரன்களுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை மறந்துவிடாதீர்கள். இந்த கருத்து முற்றிலும் முட்டாள்தனமானது” என பதிலடி கொடுக்கும் வகையில் மைக்கேல் வாகன் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com