
நடப்பு உலகக்கோப்பை சாம்பியன் அணியாக இருந்துவரும் இங்கிலாந்து அணி, 2023 உலகக்கோப்பையில் தொடர்ந்து சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. முதல் 4 லீக் போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருக்கும் இங்கிலாந்து, 1 போட்டியில் மட்டுமே வெற்றியை பதிவுசெய்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி, தொடர்ச்சியான இரண்டு தோல்விக்கு பிறகு வெற்றியை தேடி இன்று களமிறங்கியது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வரலாற்று தோல்விக்கு பிறகு, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியிலும் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி சொதப்பியது இங்கிலாந்து. இந்நிலையில் 5வது லீக் போட்டியில் இலங்கைக்கு எதிராக களமிறங்கிய இங்கிலாந்து அணி, பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூர் மைதானத்தில் முதலில் பேட் செய்தது. டாஸ் வென்ற போதும் கூட, இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு எதிராக தாக்குபிடிக்க முடியாத இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது வெளியேறினர். 33.2 ஓவரிலேயே அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 156 ரன்கள் மட்டுமே அடித்தது.
அந்த அணியில் 6 வீரர்கள் ஓரிலக்க ரன்களில் நடையைக்கட்டினர். அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் அடித்தார். இலங்கை அணியில் லஹிரு குமரா 3 விக்கெட்டுகளும், மேத்யூஸ் மற்றும் ரஜிதா இருவரும் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். 157 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 75 ரன்களில் விளையாடிவருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் இந்த மோசமான செயல்பாடு குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் வேதனை தெரிவித்துள்ளார்.
தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் கருத்து தெரிவித்திருக்கும் மைக்கேல் வாகன், “இது இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான உலகக் கோப்பை பதிப்புகளில் ஒன்றாக மாறி வருகிறது. நாம் ஒரு மோசமான கிரிக்கெட்டை ஆடிவருகிறோம்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் இங்கிலாந்தின் சொதப்பல் குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கும் நாசர் ஹூசைன், “நீங்கள் உலகக் கோப்பைக்கு வெளியே செல்லப் போகிறீர்கள் என்றால், 7 ஆண்டுகளாக என்ன கிரிக்கெட் விளையாடினீர்களோ அதை செய்துவிட்டு வெளியேறுங்கள்” என பேசியுள்ளார்.