MI தொடர் தோல்வி.. ”ஹர்திக்கிற்கு யாரும் துணை நிற்கவில்லை..” முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஏழாவது தோல்விக்குப் பிறகு, கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி, ஹர்திக் மீது முழுக் குற்றமும் இல்லை; மும்பை அணியில் சக வீரர்கள் அவருக்கு தேவையான ஆதரவு, நம்பிக்கை அளிக்காததே தொடர்ச்சியான தோல்விகளுக்குக் காரணம் என வலியுறுத்துகிறார்.
பொதுவாக ஒரு அணி தடுமாறும் போதெல்லாம், அதன் கேப்டன்தான் பெரும்பாலான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. 5 கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, தொடர்ந்து 2 சீசன்களின் மோசமான செயல்பட்டால் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மிகப்பெரிய தோல்வியை சந்தித்த பிறகு, இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது ஏழாவது தோல்வியை பதிவுசெய்தது.
இந்த தோல்விக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விமர்சனங்களிலிருந்து தப்பிப்பது கடினமாக இருந்தது. பல ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவால் தான் மும்பை அணி இவ்வளவு மோசமாக விளையாடிவருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணியில் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவுக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியில் சக வீரர்களிடமிருந்து ஆதரவு கிடைக்காததால் தான் அணி மோசமாக செயல்படுகிறது என்று முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி கூறுகிறார்.
ஹர்திற்கு யாரும் துணை நிற்கவில்லை..
மும்பை அணியின் மோசமான செயல்பாடு குறித்து பேசியிருக்கும் மனோஜ் திவாரி, “என்னைப் பொறுத்தவரை இந்த ஐபில்லில் மும்பை அணிக்கு எல்லாம் ஏற்கனவே முடிந்துவிட்டது. நான் பார்ப்பதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறேன். நான் பார்த்த கிரிக்கெட்டின் அடிப்படையில், ஒரு கேப்டன் ஒவ்வொரு வீரரின் நம்பிக்கையையும் வெல்ல வேண்டும், அணிக்கு ஒரு தலைவராக இருக்க வேண்டும். ஆனால், ஹர்திக்கிற்கு ஆதரவாக யாரும் நிற்பதாகத் தெரியவில்லை. அவருக்குத் தேவையான ஆதரவு மும்பை இந்தியன்ஸ் அணியில் இல்லை” என்று குற்றஞ்சாட்டி பேசியுள்ளார்.

