நியூசிலாந்தின் மிக முக்கிய பவுலர் OUT.. கண்ணீருடன் வெளியேறிய மேட் ஹென்றி!
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக 4 போட்டிகளில் 16.70 சராசரியுடன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறார் மேட் ஹென்றி. இதில் இந்தியாவிற்கு எதிரான லீக் போட்டியில் வீழ்த்திய 5 விக்கெட்டுகளும் அடங்கும்.
நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிவரை முன்னேறியதற்கு முக்கிய காரணமாக இருந்த மேட் ஹென்றி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் வெளியேறியுள்ளார்.
ஒரேயொரு மாற்றமாக இந்தியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் மேட் ஹென்றி இல்லாமல் களமிறங்கியுள்ளது நியூசிலாந்து அணி. இது அவ்வணிக்கு பெரிய பாதகமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏன் இறுதிப்போட்டியில் ஹென்றி இல்லை?
இந்தியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் அச்சுறுத்தலாக இருக்கும் இரண்டு வீரர்களாக ரச்சின் ரவிந்திராவுடன் சேர்த்து மேட் ஹென்றியின் பெயரையும் பல கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அந்தளவு நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார் மேட் ஹென்றி.’
டிம் சவுத்தீ மற்றும் டிரெண்ட் போல்ட் இருவரும் இல்லாத சூழலில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை முன்னின்று வழிநடத்திய மேட் ஹென்றி, தன்னுடைய லேட் ஸ்விங் வேரியேசனால் பல பேட்ஸ்மேன்களை திணறடித்துள்ளார்.
இந்நிலையில் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட மேட் ஹென்றி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் கேட்ச் பிடிக்கும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் அவதிக்குள்ளானார். இறுதிப்போட்டிக்கு திரும்பிவருவதற்கான முயற்சிகள் அனைத்தையும் செய்தபோதும், தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் வெளியேறியுள்ளார் மேட் ஹென்றி.
தன்னுடைய தேசத்திற்காக இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்ற கனவு அனைத்து வீரர்களுக்கும் ஸ்பெசலான ஒன்றாக இருக்கும். அந்தவகையில் இறுதிப்போட்டியை தவறவிட்ட பிறகு மேட் ஹென்றி கண்ணீருடன் வெளியேறியது காட்சிகள் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.