41 வருடங்களில் எந்த இடது கை வீரரும் செய்யாத சாதனை! சீக்கா, தோனி வரிசையில் இணைந்த இஷான் கிஷன்!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையெயான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து எந்த இடது கை இந்திய வீரரும் செய்யாத புதிய சாதனையை படைத்துள்ளார் இஷான் கிஷன்.
Srikanth - MS Dhoni - Ishan Kishan
Srikanth - MS Dhoni - Ishan KishanTwitter

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது. டெஸ்ட் தொடரை 1- 0 என்ற கணக்கில் வென்றதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வென்று அசத்தியுள்ளது இந்திய அணி.

இந்நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருக்கும் இந்தியாவின் இளம் வீரர் இஷான் கிஷன் கிரிக்கெட் வரலாற்றில் அரிதான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். 41 வருடங்களுக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் படைத்த அச்சாதனையை, முதல்முறையாக ஒரு இடது கை இந்திய வீரராக இஷான் கிஷன் படைத்து அசத்தியுள்ளார்.

இரண்டு அணிகளுக்கான தொடரில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் அடித்து சாதனை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன், முதல் ஒருநாள் போட்டியில் 52 ரன்களும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 55 ரன்களும் கடைசி ஒருநாள் போட்டியில் 77 ரன்களும் அடித்து அசத்தினார்.

இருதரப்பு தொடரொன்றில் 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து அரைசதம் அடித்த இடதுகை வீரரான இஷான் கிஷன், அதன் சாதனை பட்டியலில் இணைந்திருக்கிறார்.

1982ஆம் ஆண்டு முதல்முறையாக முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இலங்கை அணிக்கு எதிராக அடுத்தடுத்து அரைசதம் எடுத்து சாதனை படைத்திருந்தார். அதன்பிறகு 1985ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக திலீப் வெங்சர்க்காரும், 1993-ல் இலங்கைக்கு எதிராக மொஹமது அஷாருதீனும், 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக எம் எஸ் தோனியும், 2020ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயரும் என இச்சாதனையை படைத்திருந்தனர். இந்த அரிதான சாதனையை இதுவரை படைத்திருக்கும் அனைத்து இந்திய வீரர்களும் வலது கை பேட்டர்களாக மட்டுமே இருந்துவந்துள்ளனர். அதனை தற்போது உடைத்து முதல் இடது கை இந்திய வீரராக புதிதாக சாதனை படைத்துள்ளார் இஷான் கிஷன்.

2019ஆம் ஆண்டுக்கு பிறகு 50 ODI விக்கெட்களை வீழ்த்திய ஷர்துல் தாக்கூர்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருக்கும் ஷர்துல் தாக்கூர் 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். தொடர்ந்து விண்டீஸுக்கு எதிரான 3வது போட்டியில் 37 ரன்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தியிருக்கும் அவர், ஒரு நாள் கிரிக்கெட்டில் தன்னுடைய சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2019 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு இந்த உலகக்கோப்பை வரை அதிக ODI விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார். 52 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அவர் 2019க்கு பிறகு 50 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பவுலர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 33 போட்டிகளில் ஷர்துல் இதை நிகழ்த்தியிருக்கும் நிலையில், 47 போட்டிகளில் 47 விக்கெட்டுடன் மிட்சல் ஸ்டார்க் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com