1987-ல் கபில் டீம் செய்த சம்பவம்.. தீபாவளி பரிசு தந்த இந்திய அணியின் மறக்க முடியாத 4 போட்டிகள்!

ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து காத்திருக்கும் நிலையில், கடந்த காலங்களில் இதே தீபாவளி தினத்தில் இந்திய அணி விளையாடிய சில போட்டிகள் குறித்து இங்கே பார்ப்போம்.
india team
india teamtwitter

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, ஒருவழியாக அடுத்தகட்டத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. 10 அணிகள் மோதிய இத்தொடரில் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் தொடரின் இறுதிப்போட்டி, இன்று (நவ.12) தீபத் திருநாளில் அரங்கேற இருக்கிறது.

இந்த நாளில் இந்திய அணியும் நெதர்லாந்து அணியும் மோத இருக்கின்றன. ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து காத்திருக்கும் நிலையில், கடந்த காலங்களில் இதே தீபாவளி தினத்தில் இந்திய அணி விளையாண்ட சில போட்டிகள் குறித்து இங்கே பார்ப்போம்.

1987: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதல்

1987ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி நடைபெற்ற உலகக்கோப்பையின் 15வது லீக் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் சுனில் கவாஸ்கர் (61), நவ்ஜோத் சிங் (51), திலிப் வெங்சர்கார் (63), முகம்மது அசாருதீன் (54) ஆகியோர் அரைசதம் அடித்ததன் மூலம் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது.

அசாருதீன்
அசாருதீன்

ஆனால் பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 233 ரன்களுக்குள் சுருண்டது. இதையடுத்து இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் மகீந்திர் சிங் மற்றும் அசார்தீன் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் எடுத்து வெற்றியைத் தேடித் தந்தனர். இந்த வெற்றி, தீபாவளியின் முதல் பரிசாக இந்திய ரசிகர்களுக்கு அமைந்தது.

1992: இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதல்

1992ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி, இந்தியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி, 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 239 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் சஞ்சய் மஞ்சரேக்கர் மட்டும் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்திருந்தார்.

மஞ்சரேக்கர்
மஞ்சரேக்கர்

பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம், இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின்மூலம் தீபாவளிப் பரிசை மீண்டும் இந்திய அணி, வழங்கி மகிழ்வித்தது.

1994: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதல்

1994ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி, தீபத் திருநாளின்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தொடர் ஒன்றில் மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் அஜய் ஜடேஜா (90), சச்சின் டெண்டுல்கர் (62), அசார்தீன் (58) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

டெண்டுல்கர்
டெண்டுல்கர்

பின்னர் கடினமான இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, மீண்டும் இந்திய ரசிகர்களுக்குத் தீபாவளிப் பரிசை அள்ளிக் கொடுத்தது. இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய சச்சின் 10 ஓவர்களில் 2 மெய்டன் உள்பட, 29 ரன்களை மட்டுமே வழங்கி 2 விக்கெட்களை அறுவடை செய்திருந்தார்.

2000: இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதல்

2000ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி, கோகோகோலா சாம்பியன்ஸ் தொடரில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் 5வது போட்டியில் சந்தித்தன. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது.

கங்குல்
கங்குல்

ஆனால் பின்னர் விளையாடி இந்திய அணி, 48.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் செளரவ் கங்குலி (66), வினோத் காம்ப்ளி (60) ஆகியோர் அரைசதம் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டதுடன், தீபாவளிப் பரிசையும் ரசிகர்களுக்கு அளித்தனர்.

இதுதவிர, சில ஆண்டுகளில் தீபாவளிக்கு முன்பும் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில்கூட ஒருசில் போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com