400 ரன் சாதனை: கெயில், லாரா கருத்தும்... வியான் முல்டரின் விளக்கமும்..!
தென்னாப்பிரிக்க வீரர் வியான் முல்டர் 367 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது தான் கிரிக்கெட் உலகின் பேசுபொருள். லாராவின் சாதனையான 400 ரன்களைக் கடக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தும், அவர் அதைச் செய்யாமல் டிக்ளேர் செய்தது பலரை ஆச்சர்யப்பட வைத்தது. லாராவுடன் இதுகுறித்து உரையாடியது குறித்து தற்போது மனம் திறந்திருக்கிறார் வியான் முல்டர்.
இந்த மாத கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் தென்னாப்பிரிக்க வீரர் வியான் முல்டர் தான். ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு முதல்முறையாக கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஆரம்பம் முதலே டெஸ்ட்டை டி20 மோடில் விளையாடத் தொடங்கினார். கேப்டனாக அறிமுகமான டெஸ்ட் போட்டியில் முச்சதம், தென்னாப்பிரிக்க வீரராக அதிக ரன்கள் என எண்ணற்ற சாதனைகளை உருவாக்கினார். முச்சதத்தை கடந்து ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் அதிக ஸ்டிரைக் ரேட் வைத்திருப்பவர் முல்டர் தான். இப்படியாக ஆடிக்கொண்டிருந்தவர் இடைவேளையின் போது டிக்ளேர் என அறிவித்தார். டெஸ்ட் போட்டிக்கே உரித்தான கட்டையைப் போடும் ஆட்டத்தை அவர் ஆடவில்லை. மிக எளிதாகவே வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பாவான் லாராவின் மேஜிக்கல் எண்ணான 400 ரன்களைக் கடந்திருக்க முடியும். ஆனாலும், அவர் டிக்ளேர் செய்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் பலரை நெகிழ்ச்சியடையச் செய்தது. லெஜெண்டுகளின் சாதனைகளை உடைக்க தனக்கு விருப்பமில்லை என கூறிய முல்டர், மீண்டும் ஒருமுறை முச்சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் இதையே தான் செய்யப்போவதாக அறிவித்தார். ' முல்டர் ஒரு தங்கம் சார் ' என பலரும் பாராட்டினார்கள். அதே சமயம், டேல் ஸ்டெய்ன், கிறிஸ் கெயில் உள்ளிட்ட பலர் , முல்டர் 400 ரன்களைக் கடந்து புதிய சாதனையை உருவாக்கியிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்கள்.
இந்த சாதனைக்குப் பின்னர், லாரா தன்னுடன் உரையாடியாக தற்போது மனம் திறந்திருக்கிறார் வியான் முல்டர். "நீ உனக்கான லெகஸியை உருவாக்குகிறாய். நீ தொடர்ந்து விளையாடியிருக்க வேண்டும். சாதனைகள் முறியடிக்கப்படுவதற்காகவே உருவாக்கப்படுகின்றன. நீ மீண்டும் அந்த நிலையில் இருந்தால், நான் அடித்த ஸ்கோரைக் கடந்து சாதனை புரிய வேண்டும் " என்று லாரா முல்டரிடம் கூறியிருக்கிறார். ஆனால் தான் சரியான முடிவைத்தான் எடுத்ததாக தெரிவிக்கிறார் முல்டர். விளையாட்டை மதிப்பது என்பது தனக்கு மிகவும் முக்கியமானது என்கிறார் அவர். முல்டர் தன் பதில்களால் மேலும் மேலும் உயர்ந்துகொண்டே இருக்கிறார்.27 வயதான வியான் முல்டர், கிரிக்கெட்டை இப்படி அணுகுவது பலரை வியப்படையச் செய்திருக்கிறது. பொதுவாக விளையாட்டில் ஒருவரின் சாதனையை இன்னொருவர் முறியடிக்கவே விரும்புவார்கள். ஏற்கெனவே சாதனையை செய்தவருக்கு அது மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கும்.
லாரா 400 ரன்கள் அடித்ததும் அப்படித்தான். மேத்யூ ஹெய்டன் லாராவின் சாதனையை முறியடிக்கவில்லை என்றால், லாரா மீண்டும் அந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருப்பாரா என்பது சந்தேகமே. இதில் இன்னொரு விஷயத்தையும் பேச வேண்டும். முல்டர் புதிய சாதனையை படைக்கத் தவற விட்டபோது, " எனக்கு 400 அடிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தால் நான் நிச்சயம் அடிப்பேன். இன்னொருமுறை 300 அடிப்பதற்கான வாய்ப்பு எப்போது கிடைக்குமென யாராலும் கணிக்க முடியாது. லெஜெண்டுகள் உருவாவது அப்படித்தான். லெஜெண்டுகளால் மட்டுமே ரிக்கார்டுகளை உருவாக்க முடியும். " என பேசி இருந்தார் கிறிஸ் கெயில். 400 அடிக்கவில்லை என்றாலும், வியான் முல்டர் ஒரு லெஜெண்டு தான். எல்லா வாய்ப்பும் இருந்தும், ஒருவர் விட்டுக்கொடுக்கிறார் என்றாலே, அவரைவிட உயர்வானவர் வேற யாரு இருக்க முடியும்.
இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது, கிறிஸ் கெயில் இப்படி பேசுவதற்குப் பின்னர், இன்னொரு காரணமும் இருக்கிறது. அதைத்தன் சுயசரிதையான Six Machine: I Don't Like Cricket...I Love It புத்தக்கத்தில் குறிப்பிட்டிருப்பார் கிறிஸ் கெயில் . கெயில் முச்சதம் அடித்த டெஸ்ட் போட்டியின் போது, லாரா மிகப்பெரிய பதற்றத்தில் இருந்தாராம். ஒவ்வொருமுறையும் வந்து ஸ்கோர் என்ன என பார்த்துவிட்டு செல்வாராம். கெயில் தன்னுடைய ஸ்கோரை நெருங்குகிறார் என்பதை அறிந்ததும், லாரா சோகமாகிவிட்டாராம். உணவு இடைவேளையின் போதும், டீ பிரேக்கின் போதும், கிறிஸ் கெயில் வந்த போது லாரா ஒருவார்த்தை கூட அவரிடம் பேசவில்லையாம். கிறிஸ் கெயில் அவுட்டானதும் தான் பிரைன் லாரா நார்மலாகியிருக்கிறார். இதை அனைத்தையும் தன் புத்தகத்தில் பதிவு செய்திருந்தார் கிறிஸ் கெயில்.
இப்படியான கிரிக்கெட் உலகில், நிச்சயம் வியான் முல்டர் ஒரு லெஜெண்டு தான்.