"கோலிக்கு ஏன் நான் வாழ்த்து சொல்ல வேண்டும்?"- சர்ச்சை கருத்து.. அந்தர் பல்டி அடித்த குசல் மெண்டீஸ்!

விராட் கோலி 49வது ODI சதத்தை அடித்த போது, எதற்காக அவரை நான் வாழ்த்த வேண்டும் என குஷால் மெண்டீஸ் தெரிவித்தது சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை பெற்றுத்தந்தது.
விராட் கோலி - குசல் மெண்டீஸ்
விராட் கோலி - குசல் மெண்டீஸ்Twitter

ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களை பதிவுசெய்திருக்கும் விராட் கோலி, அதிக சர்வதேச ஒருநாள் சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்காக செய்தியாளர் சந்திப்பில் இருந்த இலங்கை கேப்டன் குஷால் மெண்டீஸிடம் விராட் கோலி குறித்து கேட்கப்பட்டது. "விராட் கோலியின் 49 சதங்களுக்காக நீங்கள் வாழ்த்த நினைக்கிறீர்களா?” என கேட்கப்பட்ட கேள்விக்கு, ”அவருக்கு நான் ஏன் வாழ்த்து சொல்ல வேண்டும்?" என குஷால் மெண்டீஸ் பதிலளித்திருந்தார். இந்த பதிலுக்கு செய்தியாளர் சந்திப்பில் இருந்த அனைவரிடம் இருந்தும் சிரிப்பலை எழுந்தது.

குஷால் மெண்டீஸின் அந்த பதில் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்யப்பட்டு, அவர் மீது அதிகமாக டிரோல்களும், விமர்சனங்களும் வைக்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது அதுகுறித்து பேசியிருக்கும் மெண்டீஸ், அன்று கேட்கப்பட்ட கேள்வியே தனக்கு புரியவில்லை என்றும், ஒரு இமாலய சாதனை படைத்த கோலிக்கு நான் அன்று வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நிறைய விமர்சனங்களை சந்தித்தேன்! - குஷால் மெண்டீஸ்

இலங்கை அணியின் தொடர் தோல்வி, வங்கதேசத்துக்கு எதிரான முக்கியமான போட்டி, கேப்டன்சி அழுத்தம் போன்றவற்றால் அதிகப்படியான நெருக்கடியில் இருந்த குஷால் மெண்டீஸிடன் கேட்கப்பட்ட கேள்வி, அவரை சமூக வலைதளங்களில் டிரோல் மெட்டீரியலாக மாற்றியது.

இந்நிலையில் அதுகுறித்து வருத்தம் தெரிவித்திருக்கும் குஷால் மெண்டீஸ், “அதற்குப் பிறகு நான் பல்வேறு விமர்சனங்களையும், ட்ரோல்களையும் சந்தித்தேன். விராட் கோலி எவ்வளவு சிறந்த வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆம், அந்த நேரத்தில் நான் கோலியை வாழ்த்தியிருக்க வேண்டும்" என்று மெண்டீஸ் க்ரிக்இன்ஃபோவிடம்(Cricinfo) தெரிவித்துள்ளார்.

kusal mendis
kusal mendis

மேலும் "அன்றைய தினம் நாங்கள் பயிற்சிக்கு முதலில் சென்றோம், அதன் பிறகு மறுநாள் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் மீதான அழுத்தம் இருந்தது. அப்போது செய்தியாளர் சந்திப்பிற்கு சென்றபோது விராட் கோலி எவ்வளவு அடித்தார் என்று எனக்குத் தெரியவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டம் குறித்து மட்டுமே எனக்கு கவனம் இருந்தது. அதனால் தான் விராட் கோலி குறித்த கேள்வியை என்னிடம் கேட்டபோது, ​​இது வங்கதேசம்-இலங்கை ஆட்டம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு என்பதால் எனக்கு குழப்பம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே அப்படி ஒரு பதிலை தெரிவித்திருந்தேன்.

ஆனால் அதற்குபிறகு திரும்பிப் பார்க்கும்போது தான், நான் எப்படி நடந்துகொண்டேன் என்பதே எனகுக் புரிந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் 49 சதங்கள் அடிப்பது எளிதான சாதனையல்ல. அப்படியோரு மைல்கல் சாதனையை எட்டுவது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அந்த நேரத்தில் என்ன கேட்கப்பட்டது என்பது எனக்கு தெளிவாகத் தெரியவில்லை” என மெண்டீஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com