யாரும் படைக்காத 2 சர்வதேச சாதனைகள் படைத்த குல்தீப்! T20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இந்திய ஸ்பின்னர்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 தொடரில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்தீப் யாதவ் 2 புதிய சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.
குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ்Cricinfo

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதலில் தொடங்கிய டி20 தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில், மூன்றாவது போட்டியை வெற்றிபெற்று தொடரை சமன்செய்ய வேண்டிய கட்டாயத்தில் சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்கியது. ஜோகன்னர்ஸ்பெர்க்கில் நடைபெற்ற 3வது போட்டியில் பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யகுமார் சதமடித்து அசத்த, 201 ரன்களை குவித்தது இந்திய அணி. இந்நிலையில் இரண்டாவது பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி குல்தீப் யாதவின் சுழலில் 95 ரன்களுக்கே சுருண்டு ஆல்அவுட்டானது. அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்தீப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதுமட்டுமல்லாமல் டி20 சர்வதேச போட்டியில் யாரும் படைக்காத இரண்டு புதிய சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.

2 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே இந்திய ஸ்பின்னர்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 2.5 ஓவர்கள் மட்டுமே வீசிய குல்தீப் யாதவ், வெறும் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது டி20 போட்டியில் குல்தீப் பதிவுசெய்த சிறந்த பவுலிங்காகும். அதுமட்டுமல்லாமல் SENA நாடுகளில் நடந்த சர்வதேச டி20 போட்டியில் 2 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே இந்திய பவுலராகவும் மாறி சாதனை படைத்துள்ளார்.

kuldeep yadav
kuldeep yadav

இதற்கு முன் 2018ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக மான்சஸ்டரில் நடைபெற்ற டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த குல்தீப், தற்போது தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச டி20 போட்டிகளில் 2முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய ஸ்பின்னராகவும் மாறி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் யஸ்வேந்திர சாஹல் மட்டுமே ஒருமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வேகப்பந்துவீச்சாளர்களில் புவனேஷ்குமார் 2 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆனால் அவர் SENA நாடுகளில் கைப்பற்றவில்லை.

பிறந்தநாளில் 5 டி20 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே சர்வதேச வீரர்!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது போட்டியில் தன்னுடைய பிறந்தநாளில் பங்கேற்ற குல்தீப் யாதவ், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஒரு சிறந்த பிறந்தநாளாக கொண்டாடினார்.

குல்தீப்
குல்தீப்

இதுவரை பிறந்தநாள்களில் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளில் அதிகபட்சமாக வனிந்து ஹசரங்கா 4/9, இம்ரான் தாஹிர் 4/21, கார்த்திக் மெய்யப்பன் 4/25 என மட்டுமே கைப்பற்றியிருந்த நிலையில், குல்தீப் யாதவ் மட்டுமே ஃபவ்-பெர் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com